
சென்னையில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பணம் கேட்டு மிரட்டி, பெண் உரிமையாளரின் துணியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்திய ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நசீமா(39). இவர் கோடம்பாக்கம் பட்டீஸ்வரர் காலனியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று நசீமா கடையில் இருந்தபோது உள்ளே புகுந்த ரவுடி ஒருவர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். நசீமா மாமூல் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவுடி உடனே நசீமா துணியை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நசீமா குடும்பசூழலை கருத்தில் கொண்டு ரவுடிக்கு பயந்து புகார் அளிக்கமால் இருந்தார்.
பின்னர் தகவல் அறிந்து வடபழனி போலீஸார் நசீமாவிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்து கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து ரவுடியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்த ரவுடி ஐயப்பன் (32) என்பதும் சரித்திரபதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை, மிரட்டல், வழிப்பறி, செயின் பறிப்பு உட்பட 16 வழக்குகள் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் ரவுடி ஐயப்பன் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை, உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.