56 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினரைச் சந்தித்த காதல் ஜோடி: கோவில்பட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்

 56 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினரைச் சந்தித்த காதல் ஜோடி: கோவில்பட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரும், ஆந்திராவைச் சேர்ந்த கெளரி பார்வதியும் காதலித்துக் கரம்பிடித்தவர்கள். ஆந்திர சினிமா பாணியில் கடத்தல், தாக்குதல் என பல எதிர்ப்புகளையும் மீறியே கைப்பிடித்தார் நம்மாழ்வார். இந்நிலையில் திருமணம் முடிந்து 56 ஆண்டுகளுக்குப் பின்பு தன் குடும்பத்தைச் சந்தித்திருக்கிறார் ஆந்திரப் பெண்ணான கெளரி பார்வதி. இது மொத்த குடும்பத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காதல் ஜோடி
காதல் ஜோடி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நம்மாழ்வார்(80). இவர் தன் திருமணத்திற்கு முன்பு ஆந்திர மாநிலம், நரசிப்பட்டிணம் பகுதியில் டவர் அமைக்கும் வேலைக்குச் சென்றார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த கெளரிபார்வதி மேல் காதல் வயப்பட்டார். ஒருகட்டத்தில் இந்தக் காதல் விவகாரம் கெளரி பார்வதியின் குடும்பத்தினருக்குத் தெரியவர, மொழி, ஜாதி ஆகியவை குறுக்கே நின்றது.

வீட்டைவிட்டு வெளியேறி நம்மாழ்வாரோடு வந்த கெளரிபார்வதியை விஜயவாடா ரயில் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் பிடித்தனர். நம்மாழ்வாரை மிரட்டி தமிழகத்திற்கு அனுப்பிவைத்தனர். அப்போது அழுதுகொண்டே தன் பெற்றோருடன் சென்ற கெளரி பார்வதி, எண்ணி பத்து நாள்களுக்குள் நீங்கள் என்னை சந்திக்க வராவிட்டால் நிச்சயமாக தற்கொலை செய்துகொள்வேன். நீங்கள் இல்லாமல் வாழ முடியாது என அழுதுகொண்டே சென்றார். இந்தக் காட்சி பசுமரத்தாணி போல் நம்மாழ்வார் மனதில் பதிந்தது. உடனே நம்மாழ்வார் யாருக்கும் தெரியாமல் மீண்டும் கெளரிபார்வதியின் ஊருக்கே போனார். சில உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து கெளரி பார்வதியை மீண்டும் அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊரான தமிழகத்தில் மேலக்கரந்தைக்கு வந்துவிட்டார்.

1966-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. இப்போது இந்தத் தம்பதிக்கு அய்யம்மாள், முத்துலெட்சுமி என்னும் மகள்களும், சண்முகராஜ் என்னும் மகனும் உள்ளனர். காலப்போக்கில் கெளரிக்கு தன் தாய் வீட்டையும், தன் குடும்பத்தினரையும் சந்திக்கும் ஆசை துளிர்த்தது. ஆனால் எங்கே தான் அங்கே சென்றால் மீண்டும் தாக்குவார்களோ என்னும் அச்சத்தில் அதைத் தவிர்த்தார்.

இப்போது 75 வயதாகும் கெளரி பார்வதியின் ஆசையை நிறைவேற்ற துடித்தார் அவரது மகன் சண்முகராஜ். இழந்து போன சொந்தங்களுக்கு உயிர் கொடுக்க நினைத்தவர் ஆந்திராவுக்குத் தேடிப்போனார். அங்கே தன் தாயின் பூர்வீகக் கிராமமான நரசிப்பட்டிணத்தில் அழைந்து, திரிந்து உறவுகளைச் சந்தித்தார். அவர்களிடம் தன் தாயின் விருப்பத்தைச் சொல்ல, அவர்களும் நாங்கள் கூட கெளரி பார்வதியைத் தேடினோம். ஆனால், கிடைக்கவில்லை என பாசமழை பொழிந்தனர். உடனே அவர்கள் அத்தனைபேரையும் வேன் பிடித்து மேலக்கரந்தைக்கு வரவழைத்தார் சண்முகராஜ்.

மேலக்கரந்தை இல்லம் முழுவதும் தமிழ், தெலுங்கு துள்ளி விளையாடியது. சாதிய பாகுபாடுகள் மறைந்துபோய் குடும்பப் பிணைப்பு மேலோங்கி இருந்தது. கெளரி பார்வதி வீட்டை விட்டு வெளியேறிய போது அவருக்கு 16 வயது. இன்று 75 வயது. பேரன், பேத்திகள், மகன், மகள், மருமக்கள் என மொத்தக் குடும்பமும் சங்கமித்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in