`இது வக்ஃபு வாரிய சொத்து'- சார்பதிவாளர் அறிவிப்பால் பதறிய நிலத்தின் உரிமையாளர்

`இது வக்ஃபு வாரிய சொத்து'- சார்பதிவாளர் அறிவிப்பால் பதறிய நிலத்தின் உரிமையாளர்

திருச்சி - முக்கொம்பு சாலையில் உள்ள திருச்செந்துறை  கிராமத்திற்கு உட்பட்ட நிலங்கள் அனைத்தும்  வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என சார்பதிவாளர் அலுவலகம் திடீரென அறிவித்துள்ளதால் அப் பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.  

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே அமைந்துள்ளது  திருச்செந்துறை கிராமம். இப்பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற விவசாயி தனக்கு சொந்தமான  1 ஏக்கர் 2 செண்ட்  நிலத்தை விற்க ராஜராஜேஸ்வரி என்ற நபருடன் ஒப்பந்தம் செய்தார். 3.50 லட்சத்துக்கு பத்திரப்பதிவு செய்ய திருச்சி 3-ம் எண் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற அவரிடம், இந்த நிலம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் இதை பதிவு செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் சென்னையில் உள்ள வக்ஃபு வாரியத்துக்கு சென்று  தடையில்லா சான்றிதழை பெறவேண்டும் என சார்பதிவாளர் முரளி தெரிவித்து இருக்கிறார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் செய்வதறியாது திகைத்தார். இதுநாள் வரை தங்களுக்கு சொந்தமான நிலத்தை திடீரென வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்று பத்திரப்பதிவு அலுவலகம் சொல்வதைக் கேட்டதும் அவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

இத்தகவல் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில்கள், வீடுகள், விவசாய நிலங்களை கொண்ட இப்பகுதி வக்ஃபு வாரியத்துக்கு எப்படி சொந்தமாகும் என்று  அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை ஒரு விளக்க அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், '3-ம் எண் இணைச் சார்பதிவக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் ஒரு சில சர்வே எண்கள் மற்றும் திருச்செந்துறை கிராமம் சர்வே எண்கள் முழுவதும் திருச்சி டவுன் எல்லைக்கு உட்பட்ட ஒரு சில T.S.No-களில் கட்டுப்பட்ட சொத்துக்கள் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்று வக்ஃபு வாரியம் தமது அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பியுள்ளது.

வக்ஃபு வாரிய தலைமை நிர்வாக அலுவலர் ரபியுல்லா கடந்த மாதம் 18-ம் தேதி அன்று, வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களின் விவரங்களை பட்டியலிட்டு, அந்த சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். 

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 12 துணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கும் இந்த கடிதம் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட கும்பக்குடி, அரசகுடி, கே.சாத்தனூர் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட சூரியூர், குண்டூர் மற்றும் திருச்சி இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட திருச்செந்துறை ஆகிய கிராமங்கள் வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன" என்று பத்திரத்தை பதிவுத்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.  இதனால், திருச்சி மாவட்டத்தில், 6 கிராமங்களில் வசிக்கும் மக்கள், சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய   வக்ஃபு வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லா, ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், திருச்சி அருகே 6 கிராமங்களை வக்ஃபு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலங்கள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணுங்கள் என்றும் அவர்  கூறியுள்ளார். இத்தனை வருடங்களாக இதுபோன்ற ஒரு சர்ச்சை எழாத நிலையில், தற்போது, வக்ஃபு வாரியத்தின் திடீர் கடிதம் மற்றும் அறிவிப்புகள் பொதுமக்களிடையே பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி  பொதுமக்களை போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in