தேர்வுகளை புறக்கணிக்கும் மாணவர்கள்; தவறு எங்கே நடந்தது?

கல்வியில் முன்னேறிய தமிழகம் எங்கே செல்கிறது?
தேர்வுக்கூடம்
தேர்வுக்கூடம்

தமிழகத்தில் அரசுப் பொதுத்தேர்வுகளை புறக்கணிக்கும் மாணவர்களால், ஆசிரியர், பெற்றோருக்கு அப்பால் அரசுக்கும் அவப்பெயர் சேர்ந்திருக்கிறது.

நம் மாணவர்களுக்கு என்னாச்சு, அவர்களின் எதிர்காலம் என்னாவது, மாணவர்களை குறிவைத்து அறிவிக்கப்பட்ட ஏராளமான நலத்திட்டங்கள், செலவினங்கள் விழலுக்கு இறைத்ததாகுமா, கல்வியில் முன்னோடி மாநிலமாக நாம் கொண்ட பெருமை காலாவதியாகிறதா..? என பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர், பெற்றோர், ஊடகங்கள், சமூக அக்கறை கொண்டோர் உள்ளிட்ட அனைவரையும் குடையும் கேள்விகள் ஏராளம்.

கரோனா களேபரங்கள் முடிந்து முழுமையான கல்வியாண்டு நடைபெற்றதன் பலாபலன்களை அறிவதற்கான பொதுத்தேர்வுகளின் மத்தியில் இருக்கிறோம். பிளஸ் 2 தேர்வின் முதல் தாளான தாய்மொழி தமிழ் பாடத்துக்கே 50 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் வரவில்லை. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த, 8 லட்சத்துக்கும் மேலானோர் ஹால் டிக்கெட் பெற்றிருந்ததில், அவர்களில் இப்படி பெருத்த எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்திருப்பது பலதரப்பிலும் அதிர்ச்சி தந்திருக்கிறது.

இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் தாளை புறக்கணித்திருக்கிறார்கள். பொதுவெளியில் பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கும் இதன் பின்னணி, பள்ளிக்கு அப்பால் ஒட்டுமொத்த சமூகத்தை நோக்கி சுட்டுவிரல் நீட்டுகிறது.

தேர்வு
தேர்வு

கரோனா காரணமா?

கரோனா பெருந்தொற்றிலிருந்து கிட்டத்தட்ட மீண்டிருக்கிறோம். 2 வருடங்கள் உலகம் முழுமைக்கும் முடக்கத்தை ஏற்படுத்திய இதன் பாதிப்புகளில், உடல்நலம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு மட்டுமல்ல, கல்வி, மனநலன் உள்ளிட்ட குழந்தைகளை குறிவைத்த பாதிப்புகளும் அடங்கும். கல்வியில் ஊடறுக்கும் நல்லது, கெட்டது எதுவானாலும் சமூகத்தில் பிரதிபலிக்க பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.

தமிழ்நாட்டில் கிராமம் தோறும் பள்ளிகள் திறந்து, மதிய உணவிட்டு மாணவர்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதன் நல்விளைவுகளை அறிய அடுத்த தலைமுறைக்கு காத்திருக்க வேண்டியதானது. அதுபோல 2 ஆண்டு கரோனா முடக்கம் என்ற போதும், மாணவர் கல்வியில் அவை நிகழ்த்தியிருக்கும் பாதிப்புகள் முழுமையாக வெளிப்பட இன்னும் ஆண்டுகள் பிடிக்கும். அதன் தொடக்க அதிர்ச்சியாக வெடித்திருப்பதே தற்போதைய பொதுத்தேர்வு எழுதாதோர் எண்ணிக்கை.

கரோனா காலத்தில், பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் கல்விக்கு உலகம் திரும்பியபோது கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்கள் அரசுப் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பதை தனியாக குறிப்பிடத் தேவையில்லை. ஏழை மக்களுக்கு எட்டாக்கனியான ஸ்மார்ட் போனும், இணைய இணைப்பும் இருந்தால் மட்டுமே ஆன்லைன் கல்வியை பெற முடியும்.

தாமதமாக சுதாரித்த அரசாங்கம், தொலைக்காட்சி அலைவரிசைகளில் பாடங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தது. ஆனால், நடைமுறையில் அவை கவைக்குதவவில்லை. எளியவர்களின் பொருளாதாரத்தை முறித்திருந்த கரோனாவிலிருந்து மீள, சிறியவர், பெரியவர் என குடும்பத்தின் அனைவரும் உழைத்தாக வேண்டிய நெருக்கடி நேர்ந்தது. இதுவே பள்ளிகள் திறந்த பின்னரும் எதிர்மறையாக எதிரொலித்தது.

இடைநிற்றல் எனும் பூதம்

கரோனா காலத்தில் இந்தியா முழுக்க குழந்தை திருமணங்கள் அதிகரித்தன. கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதன் நோக்கங்களில் ஒன்றாக அவர்களுக்கான பாதுகாப்பும் அடங்கும். கிராமப்புற பள்ளிகள் மூடப்பட்டதும் பெண் குழந்தைகள் பெற்றோருக்கு சுமையாயின. கரோனா முடக்கம் காரணமாக, செலவில்லாததாக மாறிய திருமணங்கள், கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்களை அதிகரிக்கச் செய்தன.

கரோனா சுகாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இதையெல்லாம் கவனிக்க அரசு எந்திரங்களுக்கும் நேரமில்லாது போனது. மீண்டும் பள்ளிகள் திறந்தபோது, திருமணமான பெண் குழந்தைகளின் படிப்பு ஆர்வத்துக்கும் பூட்டு விழுந்தது. மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியையும் கரோனா புரட்டிப்போட்டது.

குழந்தை திருமணங்களுக்கு நிகராக குழந்தை தொழிலாளர்களும் பெருமளவு அதிகரித்தனர். குடும்பம் கண்ட கூடுதல் வருவாயும், அளவில் சிறியதாயினும் அதனால் கிட்டிய அனுகூலங்களும், மீண்டும் பள்ளிகள் திறந்த பிறகும் மாணவர்களை அனுப்ப மறுத்தன. ஆசிரியர்களின் கட்டாயத்துக்காக சில நாள் சென்றவர்களும் பின்னர் இடைநிற்றலுக்கு ஆளானார்கள். இப்படி குழந்தைத் திருமணங்கள் மற்றும் தொழிலாளர்கள் என இடைநின்றவர்கள் ஏராளம்.

கணக்கெடுக்கப்படாத இவை இன்னும் வெளிப்பட்டால், தேர்வினை புறக்கணித்ததை விட அதிகமான அதிர்ச்சிகளை தமிழகத்தில் உருவாக்கும். இப்படி இடை நின்றவர்களில் கணிசமானோரை, இழுத்துப்பிடித்து வகுப்பறையில் ஆசிரியர்கள் அமர வைத்ததில், அவர்களே இப்போது அதிக எண்ணிக்கையிலான தேர்வு புறக்கணிப்புக்கு காரணமாகி இருக்கிறார்கள்.

எழுத்தும், வாசிப்பும் எங்கே போனது?

மாணவர் மத்தியில் தேர்வு நோக்கங்களுக்கு அப்பால் எழுதுவதும், வாசிப்பதும் அருகிப் போயிருக்கிறது. மாணவர்கள் மட்டுமல்ல சமூகத்தின் பல அடுக்குகளிலும் இதே நிலைதான். நாளிதழ் வாசிப்பு முதல் அறிவுப் பொக்கிஷங்களை தேடி வாசிப்பது வரை எல்லாம் குறைந்து போயிருக்கிறது. இணையப் பெருவெளியிலும் வாசிப்பதைவிட காட்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கும் அறியாமை அதிகரித்து வருகிறது. கரோனா முடக்க காலத்தில் வைரஸ் பரவலின் பெயரில் நாளிதழ்கள், பருவ இதழ்களை சமூகம் புறக்கணித்தன் விலை, இப்போது குழந்தைகளின் தலையில் விடிந்திருக்கிறது.

அதிகரித்த கணினி மற்றும் ஸ்மார்ட் உபகரணங்களின் உபயோகம் எழுதும் போக்கை வெகுவாய் குறைத்து விட்டது. இந்தப் போக்கு கற்றலின் தொடக்க நிலையிலுள்ள குழந்தைகளையே அதிகம் பாதித்துள்ளது. எழுதுவதும், படிப்பதும் தேர்வுக்கு மட்டுமே எனும்போது, தேர்வின் மீதான பெரும் விலக்கத்துக்கு அவை வித்திடுகின்றன. அரசுப் பள்ளிகளில் பயிலும் முதல் தலைமுறை மாணவர்கள் மத்தியில், இந்த விலக்கம் தேர்வறை வரை தற்போது எதிரொலித்திருக்கிறது. கரோனா விடைபெற்ற பிறகும் மக்கள் வாசிப்புக்கு திரும்பாதது, இதைப் போன்று இன்னும் மோசமான விளைவுகளையே உருவாக்கும். குழந்தைகள் மத்தியில் வாசிப்பும், எழுதும் போக்கும் அதிகரிக்க பெரியவர்களே முன்மாதிரியாக வேண்டும்.

அரசுப் பள்ளிகள் காரணமா?

தற்போது தேர்வுகளை புறக்கணித்திருக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்! இது பள்ளிக்கல்வித்துறைக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது. கரோனாவுக்கு பிந்தைய பள்ளி சேர்க்கையின்போது, அரசுப் பள்ளிகளுக்கு படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருந்தது. உயர்கல்வியில் 7.5% ஒதுக்கீடு மட்டுமன்றி இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் இதர இலவசங்கள், பெயரளவிலான கல்விக் கட்டணம் என மாணவ மாணவியரை ஆதுரத்துடன் அரவணைத்துக்கொண்டன அரசுப் பள்ளிகள்.

மாணவர்களின் வருகை முதல் குடும்பப் பின்னணி வரை சகல தரவுகளும் டிஜிட்டல் மயம் கண்டன. கணினியில் சொடுக்கினால் ஒரு மாணவனின் கல்வி ஜாதகம் முழுமையாய் விரியும். அவன் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லையெனில் எச்சரிக்கை செய்யும். அவன் பெற்றோர் படிப்பறிவற்று, அறியாமையில் உழல்பவராக இருப்பினும், நலத்திட்ட உதவிகள் தேடிச் செல்வதை உறுதி செய்யும்.

ஓர் அரசுப் பள்ளி
ஓர் அரசுப் பள்ளி

இவற்றின் அடிப்படையில், அரசுப் பள்ளிகள் பாய்ச்சல் கண்டிருப்பதாக இறுமாந்திருந்தவர்கள் நினைப்பில் இப்போது இடி விழுந்திருக்கிறது. இன்று அரசுப் பள்ளிகளும் அதன் ஆசிரியர்களுமே, அதிகாரிகளின் சரமாரி கேள்விகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். போதிய ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, ஆய்வகம், கழிவறை தொடங்கி வகுப்பறை வரையிலான கட்டிட வசதிகள் போதாமை என கிராமப்புற அரசுப் பள்ளிகள் எதிர் நோக்கியிருக்கும் சவால்கள் அப்படியே இருக்கின்றன. ஆசிரியர்களை அழுத்தும் பணிச்சுமை, பொறுப்பற்ற ஆசிரியர்களின் போக்கு ஆகியவை கற்றல் கற்பித்தல் பணிகளை தொடர்ந்து தொய்வடையச் செய்கின்றன.

போதிய விழிப்புணர்வு இல்லாத பெற்றோர், பிள்ளைகளை பொறுப்பாக கண்டிக்கவும் கண்காணிக்கவும் தவறுவதும் ஆசிரியர்களின் சவால்களை அதிகரிக்கின்றன. சிபிஎஸ்இ பாடங்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்ட பாடங்களின் சுமையால், மெல்லக் கற்கும் மாணவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். இதில் பிரதானமாக, கரோனா காரணமாக 2 கல்வியாண்டுகளை படிக்காமலேயே பாஸ் செய்த மாணவர்கள், மேல்நிலைக்கல்வியில் விழிபிதுங்கினார்கள். மாணவருக்கான அடிப்படை கல்வியில் அகழி விழுந்தால், அதை தூர்ப்பது கடினம் என்பதையும் தற்போதைய நடைமுறை சவால்கள் நமக்கு காட்டுகின்றன.

மரத்தடி வகுப்புகள்
மரத்தடி வகுப்புகள்

ஊர்கூடி தேர் இழுப்போம்

பள்ளிக்கூடங்கள் மூடப்படும்போது, சிறைச்சாலைகள் திறக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாகும் என்பார்கள். பள்ளி என்பது வெறும் ஏட்டுக்கல்வியோடு முடிந்து விடுவதல்ல. சமூகத்துக்கான நாற்றங்கலாக மாணவர்களை அரவணைத்து செறிவு சேர்ப்பவை பள்ளிகள். நம் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமன்றி விளிம்புநிலை குடும்பங்கள் வரை அனைத்துக் குழந்தைகளும் கல்வியறிவு பெற்றால் மட்டுமே சமூகத்தில் சுபிட்சம் சேரும்.

இல்லையெனில் பக்கத்து வீட்டு கூரை பற்றியெறிவதை வேடிக்கை பார்ப்பவரின் பொறுப்பின்மைக்கு ஆளாவோம். இடை நிற்றலின் காரணம் எதுவாயினும் அவற்றைக் களைந்து, பள்ளிக்கல்வியை தொடர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் கண்ணில் பட்டால் அரசுக்கு தெரிவிக்க அனைவரும் முன்வர வேண்டும். இதற்கு ஆசிரியர், அரசு மட்டுமல்ல அனைவரும் ஊர் கூடி தேர் இழுத்தாக வேண்டும்.

ஆர்வத்தோடு அரசுப் பள்ளி விரையும் சிறார்
ஆர்வத்தோடு அரசுப் பள்ளி விரையும் சிறார்

முன்பெல்லாம் தேர்வு எழுதாதோர் எண்ணிக்கை குறித்த தரவுகள் தாமதமாகவே வெளியாகும். தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமானதில், உடனுக்குடன் அவை வெளியாகி அதிர்ச்சியூட்டுகின்றன. ஏனெனில், ஆண்டுதோறும் சுமார் 4 முதல் 5% மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்து வருகிறார்கள் என்கிறது பள்ளிக் கல்வித்துறை புள்ளிவிவரம். இம்முறை கரோனா உள்ளிட்ட காரணங்களில் இது சற்றே அதிகரித்து உள்ளது.

அப்படி தேர்வுகளை தவிர்த்தவர்களை கண்டறிந்து, சிறப்பு வகுப்புகள் மற்றும் உடனடித் தேர்வுகள் வாயிலாக அடுத்த கல்வியாண்டிலேயே இதர மாணவர்களுக்கு இணையாக முன்னேறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்திருக்கிறார். இது உட்பட, பள்ளி வருகை விழுக்காடு குறைந்தோருக்கும் தேர்வெழுத அனுமதி உள்ளிட்ட சலுகைகளையும் அறிவித்திருக்கிறார். பள்ளிக்கே வராதவர்கள் தேர்வில் என்ன எழுதப் போகிறார்கள் என்ற கேள்வி இங்கே எழுந்தாலும், தேர்வு குறித்த அச்சம் அவர்களிடம் விடுபட இவை வாய்ப்பளிக்கும்.

எப்படியாயினும், கல்வியில் முன்னேறும் மாநிலமாக அடையாளம் பெற்ற தமிழ்நாட்டில் இந்த மாணவர்களின் தேர்வு புறக்கணிப்பு பல்வேறு எச்சரிக்கைகளை மணியடித்து சொல்லியிருக்கிறது. அரசும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் விழித்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே, நாற்றங்கால் பயிர்களை பாதுகாக்க முடியும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in