சந்திக்க வந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கைதி: புழல் சிறையில் பரபரப்பு

லஞ்சம் தாண்டவமாடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம்
புழல் சிறை 2
புழல் சிறை 2சந்திக்க வந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கைதி: புழல் சிறையில் பரபரப்பு

சென்னை புழல் மத்திய சிறையில் ஜெயிலர் அலுவலகத்தில் தன்னைச் சந்திக்க வந்த பெண்ணை கைதி ஒருவர், சக கைதிகள் முன்னிலையில் கட்டிபிடித்து முத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சிறையில் அதிகாரிகள், மருத்துவர்கள் பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு சலுகை வழங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சுரானா குழுமம் பல வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ருபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 2022 ஜூலை மாதம் இம்மோசடி வழக்கில் தொடர்புடைய சுரானா குழுமத்தின் போலி இயக்குநர்களான தினேஷ்சந்த், விஜயராஜ் சுரானா, ஆனந்த், பிரபாகர், மற்றும் ராகுல்சந்த் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறை 2-ல் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் அனைவரும் தங்கள் பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கு பணம் கொடுத்து, தினமும் வெளியில் இருந்து சிறப்பு உணவு, பான்தூள் (பான்மசாலா), வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, வெளிநாட்டு சாக்லேட் உள்ளிட்ட ஆடம்பர உணவு உண்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தினமும் இவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் ஜெயிலர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட அங்கு வைத்து கைதிகளைச் சந்தித்து பேசிவருவதும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்படி சந்திக்க வந்த பெண்ணை நூற்றுக்கணக்கான கைதிகள் முன்பு கைதி ஒருவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி சிறையில் உள்ள மருத்துவர் பணக்கார கைதிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை கடிதம்(பொய்) வழக்குவதாகவும், இதே ஏழை கைதிகளுக்கு உண்மையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் பணம் கொடுத்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு பணம் கொடுக்க மறுத்த கைதிகள் சிலர் இவரது நடவடிக்கையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவலமும் அறங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு புழல் சிறையில் பணக்கார கைதிகளுக்கு ஓரு சலுகை, ஏழை கைதிகளுக்கு ஒரு சலுகை வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கடிதம் அனுப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in