நெருங்கி வரும் தீபாவளி: எகிறும் சாம்பார் வெங்காய விலை!

நெருங்கி வரும் தீபாவளி: எகிறும் சாம்பார் வெங்காய விலை!

கடந்த மாதத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருந்த சாம்பார் வெங்காயத்தின் விலை இந்த மாதம் சிறிதுசிறிதாக உயர்ந்து தற்போது தீபாவளி பண்டிகை நேரத்தில்  மிகக் கடுமையாக  உயர்ந்திருக்கிறது. 

கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில்  இந்தியா முழுவதும் பெய்த மிக கனமழையால் சின்ன வெங்காயம் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது.  நன்கு விளைச்சல் கண்டிருந்த சின்ன வெங்காயம் மழையில் நனைந்து வீணானதால் அவற்றை சேமித்து வைக்க முடியாத விவசாயிகள் கிடைத்த விலைக்கு அதனை விற்க முயன்றனர்.  அதனால் சின்ன வெங்காயத்தின் விலை மிகவும் சரிந்து காணப்பட்டது.

அதனால் சிறு வியாபாரிகள் அவற்றை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வாகனங்களில் ஏற்றி  4 கிலோ 50  ரூபாய் என்கிற விலையில் கிராமம் தோறும் சென்று விற்று லாபம் பார்த்தனர்.  பொதுமக்களுக்கும் அது பயன் தந்தது. ஈரோடு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் 25 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காய மூட்டைகள்  100 ரூபாய்க்கு விற்ற கொடுமையும் அப்போது நடந்தது. அதனால்  முட்டை மூட்டையாக மக்கள் வாங்கிச் சென்று அதை காய வைத்து பயன்படுத்தினார்கள்.

மழை குறைந்து கொஞ்சம் வெயில் காட்டத் தொடங்கியதும் மீண்டும் சின்ன வெங்காயத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் உயரத் தொடங்கியது.  கிலோ 25 ரூபாய் என்று விற்க ஆரம்பித்து, பின்னர் 40 ரூபாய் 50 ரூபாய் என்று உயர்ந்தது.  கடந்த வாரத்தில் 90 ரூபாய் என்று விற்றுவந்த சின்ன வெங்காயத்தின் விலை இன்று காலை கோயம்பேடு காய்கறி அங்காடியில்  தரமான நல்ல சின்ன வெங்காயம் கிலோ 120 ரூபாய்க்கு விற்கிறது.

இதனால் சின்ன வெங்காயத்தை வாங்கி பயன்படுத்துபவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  அதே நேரத்தில் பல்லாரி வெங்காயத்தின் விலை கிலோ 20 முதல் 30 ரூபாய் வரையில் விற்கப்படுவதால் சின்ன வெங்காயத்திற்கு மாற்றாக அந்த வெங்காயத்தை இல்லத்தரசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in