ஒரு கிலோ மல்லிகை 3,000 ரூபாய்: பனிபொழிவினால் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை!

ஒரு கிலோ மல்லிகை 3,000 ரூபாய்: பனிபொழிவினால் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை!

தொடர் பனிப்பொழிவினால் பூக்களின் வரத்து குறைவாக இருந்ததாலும், நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் விலை கடுமையான உச்சம் தொட்டது. குமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் பிரசித்திபெற்ற மலர் சந்தை உள்ளது. இங்கு இருந்து தான் தென்மாவட்டங்கள் முழுமைக்கும் பூக்கள் செல்வது வழக்கம். தோவாளை மலர் சந்தை கேரள மாநிலத்தின் மலர் தேவைகளை நிறைவேற்றும் கேந்திரமாகவும் உள்ளது. இந்த மலர் சந்தைக்கு வழக்கமாக தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயத் தோட்டங்களில் விளைந்த ஏராளமான மலர்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

ஆனால் தமிழகத்தில் புயல் எதிரொலியாக கடந்த சில தினங்களாகவே பனிபொழிவான சூழல் நிலவுகிறது. இதனால் பூக்களின் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக தோவாளை மலர் சந்தைக்கு பூக்களின் வரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 3,000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,750 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அரளிப்பூவானது கிலோ 250 ரூபாய்க்கும், சேலம் அரளி 220 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 125 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.

தோவாளை மலர் சந்தையிலேயே மல்லிகை கிலோ 3,000 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் இங்கிருந்து பூக்களை வாங்கும் வியாபாரிகள் தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக மல்லிகையை கிலோ 4,000 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்தனர். கடும்பனிப்பொழிவு மலர் உற்பத்திக்கு ஏற்றதாக இல்லாததால் விளைச்சல் குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in