தேசிய நல்லாசிரியர் விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்குகிறார், பிரதமர் கலந்துரையாடுகிறார்

தேசிய நல்லாசிரியர் விருதுகள்:   குடியரசுத் தலைவர் வழங்குகிறார், பிரதமர் கலந்துரையாடுகிறார்

செப்டம்பர் 5 ஆசிரியர் தினமான இன்று தேசம் முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை இன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.

செப்டம்பர் 5-ல் பிறந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் நினைவாக 1962 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் நாட்டின் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இந்தியா முழுவதும் இருந்து 46 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியரான கே.ராமச்சந்திரன் 2022-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல புதுச்சேரியில் முதலியார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவுக்கும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார்.

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் இந்த ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகளின் நோக்கமானது, தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்திய நாட்டிலுள்ள சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடி கௌரவிப்பதாகும் என பிரதமர் அலுவலகம் பாராட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in