
கேரளத்தில் பணி முடிந்து திரும்பும்போது பத்துகிலோ மாம்பழத்தை திருடிய காவலர் தலைமறைவானார். அவரை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், இடுக்கியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலராக இருப்பவர் ஷிகாப். இவர் தன் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அதிகாலையில் இவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது காஞ்சிரப்பள்ளி- முண்டக்கயம் சாலையில் ஒரு பழக்கடை வந்தது. அங்கே வெளியே ஒரு டிரேயில் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்தக்கடையில் உரிமையாளர் இல்லை. இதைப் பார்த்ததும் சலனப்பட்ட காவலர் ஷிகாப், தன் டூவீலரை ஒதுக்கி நிறுத்திவிட்டு பத்து கிலோ மாம்பழங்களைத் திருடி தன் வண்டியில் போட்டார்.
மாம்பழம் தானே என அசட்டையாக கிளம்பிவிட்டார் ஷிகாப். ஆனால் இதுகுறித்து பழக்கடைக்காரர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது டூவீலரில் வந்து திருடியவர் கோட், ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை. தொடர்ந்து, வாகன எண்ணின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காவலர் ஷிகாப் திருடியது தெரியவந்தது. போலீஸார் தன்னைத் தேடுவது தெரிந்ததும் காவலர் ஷிகாப் தலைமறைவாகிவிட்டார். போலீஸுக்கு பயந்து, போலீஸ்காரரே தலைமறைவாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிகாப் மாம்பழம் திருடும் சிசிடிவி காட்சிகள் கேரளத்தில் வைரலாகி வருகிறது.