`அரசின் நோட்டீசையும் மீறி பணம் வசூலித்து மோசடி செய்தார்'- பாஜக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

`அரசின் நோட்டீசையும் மீறி பணம் வசூலித்து மோசடி செய்தார்'-  பாஜக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் என்பவர், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தி மோசடி செய்ததாக அறநிலையத் துறையினரால் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்த வழக்கில் கடந்த மாதம் 29-ம் தேதியன்று ஆவடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அவர் தற்போது வெளியில் இருக்கிறார்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் திருப்பணி என்ற பெயரில் மிலாப் செயலி மூலம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் கார்த்தி கோபிநாத் வசூலித்துள்ளதாகவும், அதிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் திருப்பணிகளுக்காக தனி நபர் நன்கொடை வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு வசூலித்து இருந்தால் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனாலும் அதை மீது கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்தும் பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் மீறப்பட்டுள்ளது. அதனால் அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் விசாரணை ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால் கார்த்தி கோபிநாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறையின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in