கோவை நீதிமன்றம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை போலீஸார் பிடிக்க முயன்றபோது பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவரது கால் உடைந்தது.
கோவை நீதிமன்றம் வளாகம் அருகே கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டனை சேர்ந்த கோகுல் (25) என்பவர் கடந்த மாதம் 13-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி(26) என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில் பார்த்தசாரதி இன்று கோவை ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸார் அங்கு சென்று அவரை தேடினர்.
அப்போது ரத்தினபுரி கண்ணப்பன்நகர் பகுதியில் பதுங்கி இருந்த பார்த்தசாரதி போலீஸாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். இதையடுத்து, அவரை போலீஸார் துரத்திச்சென்றனர். அப்போது, போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க அங்குள்ள தயிர்இட்டேரி பாலத்தின் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அவரது கால் முறிந்தது. வலியால் துடித்த அவரை மீட்டு வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.