அத்துமீறி வீட்டை உடைத்த போலீஸார்; பத்து சவரன் நகைகள் மாயம்: முன்னாள் எம்.எல்.ஏ மனைவி முதல்வரிடம் புகார்

அத்துமீறி வீட்டை உடைத்த போலீஸார்; பத்து சவரன் நகைகள் மாயம்: முன்னாள் எம்.எல்.ஏ மனைவி முதல்வரிடம் புகார்

கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் ஞாறக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ சைமன் பிரிட்டோ வீடு உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு உயிர் இழந்தார். இவரது மரணத்திற்கு பின்பு இவரது மனைவி ஷீனா பாஸ்கர், தன் மகளுடன் டெல்லியில் குடியேறினார். ஞாறக்கல் பகுதியில் இருந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வீட்டில் போலீஸார் அத்துமீறி நுழைந்ததாகவும், பத்து பவுன் நகைகள் மாயமாகி இருப்பதாகவும் முதல்வருக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்துள்ளார் ஷீனா பாஸ்கர்.

இதுகுறித்து ஷீனா பாஸ்கர் கூறுகையில், “ஒருமாதத்திற்கு முன்பு ஜிஷ்ணு என்பவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தோம். அவரிடம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக 31-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு ஞாறக்கல் போலீஸார் வந்துள்ளனர். அப்போது ஜிஷ்ணு வீட்டில் இல்லை. சிறிதுநேரத்திலேயே அவர் திரும்ப வந்துவிட்டார். ஆனால் அதற்குள் நான் வாடகைக்கு விட்ட வீட்டின் இருகதவுகளை நெம்புகோல் வைத்து உடைத்து உள்ளே போய்விட்டனர். மாடிப்பகுதியை நான் வாடகைக்கு விடவில்லை. அதன் சாவியும் என்னிடம் தான் உள்ளது. அதில் என் கணவர் எம்.எல்.ஏவாக இருந்தபோது வாங்கிய விருதுகளும், பத்து சவரன் நகைகளும் இருந்தது. இப்போது அதுவும் மாயமாகியுள்ளது.

என் பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஹிலாரி என்ற பெண்ணுக்கும், எனக்கும் முன்விரோதம் இருந்தது. அவர்தான் குற்றவழக்கில் தொடர்புடையவர் இந்த வீட்டில் இருக்கிறார் எனத் தகவல்கொடுத்துள்ளார். வாடகைதாரர் ஜிஷ்ணு வீட்டிற்கு தான் வந்துகொண்டிருப்பதாக அலைபேசியில் அழைத்துச் சொல்லியும் காவலர்கள் காத்திருக்காமல் வீட்டை உடைத்துள்ளனர். அரை மணி நேரம் காத்திருந்தால் வீடு உடைக்கப்பட்டிருக்காது” என்றார்.

அதேநேரம் காவலர்களோ, “குண்டர் குற்றங்களில் ஈடுபடும் நபர் ஒருவர் வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. நாங்கள் சென்றிருந்த போது வீட்டில் பேன், லைட் ஓடியது. அதனால் அந்த வீட்டின் பராமரிப்பைச் செய்யும் சுபா என்பவரிடம் அனுமதி பெற்றே உடைத்தோம். சின்னச் சேதம்தான்” என்றார். இதனிடையே இவ்விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முன்னாள் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ மனைவி ஷீனா பாஸ்கர் புகார் கொடுத்துள்ளார். இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in