
சினிமா துணை நடிகைகளுடன் ஜாலியாக இருப்பதற்காகவே பல வீடுகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி, தோவாளை, மாதவாலயம் உள்ளிட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவந்தன. இந்தக் கொள்ளையனைப் பிடிக்கும்வகையில் போலீஸார் தனிப்படை அமைத்து இருந்தனர். இந்தநிலையில் இதேபாணியில் அம்பாசமுத்திரம் பகுதியில் ஒரு திருட்டுச் சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளியை நாமக்கல்லில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் கன்னியாகுமரி மாவட்டம், முகிலன்குடியிருப்பைச் சேர்ந்த சுடலைப்பழம்(48) என்பது தெரியவந்தது. ஆரல்வாய்மொழியிலும் இவரே 15க்கும் அதிகமான வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது. ஒவ்வொரு பகுதியிலும் சில பெண்களிடம் பழகி, அவர்கள் மூலமே அந்த ஏரியாவில் யார் வீட்டில் ஆள்கள் இல்லை என்பதை அறிந்து சுடலைப்பழம் கொள்ளையடித்துவந்துள்ளார்.
இதேபோல் ஒரு ஏரியாவுக்கு சென்று பகல் முழுவதும் நோட்டம் விட்டுவிட்டு இரவில் 3 மணிக்கு மேல் கொள்ளையடித்து வந்துள்ளார். கொள்ளையடித்தப் பணத்தில் தமிழ்நாடு, கேரளாவில் பல துணை நடிகைகளிடம் ஜாலியாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் அதற்காகவே தொடர் திருட்டிலும் ஈடுபட்டதை வாக்குமூலமாகச் சொல்ல போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கொள்ளையன் சுடலைப்பழத்தை பூதப்பாண்டி கோர்ட்டில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.