போலீஸ் கண்முன்னே அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்: போதை இளைஞர்களுக்கு வலை

தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்தினர்
தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்தினர்

சிதம்பரம்  நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை  வழிமறித்து ஓட்டுநர் மற்றும்  நடத்துனரை தாக்கிய வாலிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் கோட்டம், சிதம்பரம்  பணிமனைக்கு உட்பட்ட  அரசுப் பேருந்து ஒன்று நேற்று  இரவு புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது.  சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராக நல்லூர் கிராமம் அருகே வரும்போது பேருந்துக்கு முன்னால் இரண்டு இரு சக்கர வாகனங்களில்  வந்து  கொண்டிருந்த மூன்று பேர்  பேருந்தை முந்தி செல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால் அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை  வேகமாக  இயக்கியதால்  அவர்களால் பேருந்து கடந்து முன்னால் செல்ல இயலவில்லை.

குடிபோதையில் இருந்த அவர்கள் கோபமடைந்து  பேருந்துக்கு முன்னால் சென்று பேருந்தை  வழி மறித்துள்ளனர்.  பின்னர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை இறங்கி வரக்கூறி அசிங்கமாக பேசி அடித்துள்ளனர். அதில் நடத்துனர் வைத்திருந்த பணப்பையை பறித்து வீசியுள்ளனர்.

அப்போது பேருந்து உள்ளே காக்கி சட்டை அணியாத காவலர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் தாங்கள் யார் என்பதை எடுத்துக் கூறி அந்த வாலிபர்களை தடுத்தும்கூட கேட்காமல் அவர்கள்  நடத்துனர் மற்றும் ஓட்டுநரை கடுமையாக  தாக்கியுள்ளனர். அவர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிதம்பரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணன், நடத்துனர் பாலமுருகன் ஆகியோர்  சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விவரம் அறிந்த புவனகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாக்கியவர்களை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in