8 நாள் சிகிச்சைக்கு பிறகு பிரிந்த மகளின் உயிர்; உயிருக்கு போராடும் அம்மா, தம்பி: தந்தையால் விஷம் கொடுக்கப்பட்ட துயரம்

8 நாள் சிகிச்சைக்கு பிறகு பிரிந்த மகளின் உயிர்; உயிருக்கு போராடும் அம்மா, தம்பி: தந்தையால் விஷம் கொடுக்கப்பட்ட துயரம்

சிதம்பரம் அருகே  உரக்கடைக்காரர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள  விஷம் குடித்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மகள் 8 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம்  கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் கணேஷ் (45).  இவர் சிதம்பரம் பொய்யாபிள்ளைசாவடி புறவழிச்சாலை அருகே உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பிரபாவதி(32) . இவர்களது மகள் சங்கமித்ரா(11) , மகன் குருசரண்(9).

கணேஷுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையும் அதிகரித்தது.  கடன் கொடுத்தவர்கள் அதனை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்ததால்  மனம் உடைந்து காணப்பட்ட கணேஷ், கடந்த 23-ம் தேதி தனது குழந்தைகளுக்கும் மனைவிக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு புதுச்சத்திரம் அருகே அன்னப்பன்பேட்டை கிராமத்திற்கு சென்று முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வீட்டில் மயக்க நிலையில் கடந்த பிரபாவதி மற்றும் 2 குழந்தைகளை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக கணேஷ் தனது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாட்ஸ் அப்பில் தன்னுடைய நண்பர்களுக்கு ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.  அதன் அடிப்படையில் இது குறித்து  புதுச்சத்திரம் போலீஸார்  வழக்கு பதிவு செய்து கணேஷை  தற்கொலைக்கு  தூண்டியதாக சிவாயம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் செங்குட்டுவன்(52) என்பவரை கைது செய்தனர்.  மேலும் தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வருகின்றனர்.  

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சங்கமித்ரா  சிகிச்சை பலனின்றி நேற்று  பரிதாபமாக உயிரிழந்தார்.  இது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரபாவதி, குருசரண் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தந்தையால் விஷம் கொடுக்கப்பட்ட சிறுமி 8 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in