அரசு பள்ளிக்கு சொந்தம் கொண்டாடி பூட்டு போட்டவர் கைது!

அரசு பள்ளிக்கு சொந்தம் கொண்டாடி பூட்டு போட்டவர் கைது!
சின்னையா போட்ட பூட்டு

புதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியின் இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி பள்ளிக்கு பூட்டு போட்ட நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மரத்தடியில் மாணவர்கள், சின்னையாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்
மரத்தடியில் மாணவர்கள், சின்னையாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி தட்டாவூரணி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த பிச்சையா என்பவர் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பாக தானமாக அளித்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் பெற்ற இடத்தில்தான் பள்ளி நடைபெற்று வருகிறது. அந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பிச்சையாவின் மகன் சின்னையா என்பவர் ஆபரேட்டர் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சரியாக பணியாற்றறாததால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. குடிநீர் வினியோகம் முறையாக இல்லை என்று பொதுமக்கள் புகார் அளித்தனர்.

ஆனால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னையா, தனது தந்தை தவறுதலாக இந்த இடத்தை பள்ளிக்குக் கொடுத்து விட்டதாகவும், அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும் கூறிவந்தவர் இன்று காலை அந்த பள்ளியை பூட்டு போட்டு பூட்டி விட்டார்.

சின்னையா
சின்னையா

இதனால் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அந்த பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மரத்திற்கு கீழே அமர்ந்திருந்தனர். ஆசிரியர்களும் அங்கேயே மாணவர்களுடன் அமர்ந்திருந்தனர். மேலும் அந்த வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்திற்கும் குழந்தைகள் செல்ல முடியாமலும், சாப்பிட முடியாமல் இருந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கல்வி அதிகாரிகள், வருவாய் வட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் காவல் துறையினர் பள்ளிக்கு வந்தனர். பிரச்சினையை ஏற்படுத்திய சின்னையாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தையில் பள்ளியைத் திறப்பதற்கு சின்னையா சம்மதிக்கவில்லை. இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குவந்த கறம்பக்குடி போலீஸார் சின்னையாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். அதன்பிறகு பள்ளி திறக்கப்பட்டது. அதனையடுத்து மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குள் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in