நீதிமன்றம் சென்று வந்தவர் நெடுஞ்சாலையில் படுகொலை: காரை விட்டு மோதி சினிமா பாணியில் வெட்டிக்கொன்ற கொடூரம்

பூவனூர் ராஜ்குமார்
பூவனூர் ராஜ்குமார்

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடையவரான  பூவனூர் ராஜ்குமார் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (32).  இவர் வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பூவனூர் ராஜ்குமார்,  அவரது வழக்கறிஞர் உள்ளிட்ட ஐந்து பேர் காரில்  இன்று காலை வந்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் தனது வழக்கறிஞரை கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் 5 பேரும் கமலாபுரம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது கமலாபுரத்திற்கு அருகே மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி அதி வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார், இவர்கள் வந்த கார் மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது.

அதில் காரின் பின்பக்க கதவு நசுங்கியதால் பின்னால் அமர்ந்த அமர்ந்திருந்தவர்கள் வெளியே வர முடியவில்லை.  இந்த நிலையில் ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கிய எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இவர்களின்  காரை நெருங்கியது.  அவர்களைப் பார்த்ததும்  பூவனூர்  ராஜ்குமார்  காரை விட்டு இறங்கி அவர்களிடமிருந்து  தப்பிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைய முற்பட்டார்.  அவரை  துரத்திச் சென்ற அவர்கள் தாங்கள் வைத்திருந்த அறிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். 

இதில்  கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயங்கள் அடைந்த  பூவனூர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட 50க்கும்  மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ராஜ்குமார் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது எனவும், மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீடாமங்கலம் கடைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம்  என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூவனூர் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த பலர் திரண்டு திருவாரூர் தஞ்சாவூர் சாலையில் விளமல் என்கிற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in