குறைகளைக் கேட்க வந்தவருக்கு காத்திருந்தது பிறந்தநாள் கேக்: ஊராட்சி தலைவரை நெகிழ வைத்த கிராமமக்கள்

குறைகளைக் கேட்க வந்தவருக்கு காத்திருந்தது பிறந்தநாள் கேக்: ஊராட்சி தலைவரை நெகிழ வைத்த கிராமமக்கள்

எங்கள் ஊராட்சி தலைவர்  அப்படிப்பட்டவர்,  இப்படிப்பட்டவர் என்று பெரும்பாலான ஊராட்சித் தலைவர்களைப் பற்றி  தேர்ந்தெடுத்த மக்கள் புலம்பி வரும் நிலையில்  தங்கள் ஊராட்சித் தலைவரின்  பிறந்த நாளை ஊரே ஒன்று சேர்ந்து மரத்தடியில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.

புதுக்கோட்டை 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சியின் தலைவர் க.பாபு  ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் ஆர்வமுள்ள இவர் காளைகளை வளர்த்து அதன் மூலம் ஏராளமான பரிசுகளையும் வென்றுள்ளார்.

அதே நேரத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கஜா புயல் நேரத்திலும் கரோனா தொற்று காலத்திலும் அந்தப் பகுதி மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் தங்கள் ஊராட்சித் தலைவரின் பிறந்த நாளை ஊரே ஒன்று சேர்ந்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஊரின் நடுவில் உள்ள புளிய  மரத்தடியில்  அனைவரும் இன்று காலை ஒன்று சேர்ந்தனர்.  கேக் ஒன்றை வாங்கி வந்து அங்கு வைத்தனர். அதன் பின்னர் தங்கள் ஊராட்சி தலைவர் பாபுவிற்கு அலைபேசி மூலம் தங்கள் குறைகளைக் கேட்க புளிய மரத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

அதையடுத்து பொதுமக்கள் அழைத்ததால் என்னவோ ஏதோ என்று பதறியபடி அங்கு வந்த பாபுவை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.  தனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காகவே அனைவரும் கூறியிருக்கிறார்கள் என்பதை அறிந்த பாபு அகமகிழ்ந்தார். அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த கேக்கை  வெட்டச்சொல்லி மக்கள் வலியுறுத்தினர்.  அதனையடுத்து கேக்கை வெட்டி அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட பாபு, மக்களின் இந்த அன்பில் நெகிழ்ந்தார்.  இது தனக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்து விட்டதாகவும் அவர் கூறினார். கேக் வெட்டியதோடு  விடாத மக்கள் அவரது ஜல்லிக்கட்டு ஆர்வத்தை அறிந்து வெள்ளியிலான காளை சிலையை பரிசாகவும்  வழங்கினர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in