கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போனை ஒப்படைத்த பெற்றோர்: சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி உத்தரவு

நீதிமன்றம் வந்த மாணவியின் தாய்
நீதிமன்றம் வந்த மாணவியின் தாய்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை  ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் செல்போனை  ஒப்படைக்க மாணவியின் பெற்றோர்  விழுப்புரம் நீதிமன்றத்திற்கு இன்று  வந்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம். சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி  மாணவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் உயிரிழந்த நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் பெரும் கலவரமும் ஏற்பட்டு தனியார் பள்ளி சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவி  மரண வழக்கை விசாரித்து வரும்  சிபிசிஐடி போலீஸார்  மாணவி  பயன்படுத்தி வந்த செல்போனை விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என மாணவியின்  பெற்றோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் செல்போனை ஒப்படைக்க மாணவியின்  பெற்றோர் மறுத்து வந்தனர். 

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து  மாணவியின்  செல்போனை உடனே ஒப்படைக்க வேண்டும் என பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விழுப்புரத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு இன்று வந்த  மாணவியின் பெற்றோர் மாணவி  பயன்படுத்தி வந்த செல்போனை  வழக்கறிஞர்கள் மூலம் ஒப்படைத்தனர். 

ஆனால்  மாணவியின்  செல்போனை பெற்று கொள்ள மறுத்துவிட்ட விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி, அதனை  சிபிசிஐடி விசாரணை அலுவலரிடம் நேரடியாக வழங்கி அதற்கான ஒப்புதல் சான்றை பெற்று கொள்ளுமாறு  அறிவுறுத்தினார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி முன்னிலையில் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதியிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர், மாணவியின் பெற்றோரிடம் ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in