மக்கள் பிரச்சினைக்காக போராடுபவர் ‘தலப்பா’; ஊராட்சி தலைவரை படுகொலை செய்த சிறுவர்கள்: கோவில்பட்டியில் பயங்கரம்

கொலை செய்யப்பட்ட பொன்ராஜ்
கொலை செய்யப்பட்ட பொன்ராஜ்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள திட்டங்குளம், ஊராட்சிமன்றத் தலைவர் பொன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ளது திட்டங்குளம். இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பொன்ராஜ்(63). இவர் இன்று மதியம் தெற்கு திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயப் பணிகளைச் செய்யச் சென்றார். இவர் ஆட்டு வியாபாரியாகவும் உள்ளார். அப்போது ஏற்கெனவே அவரது தோட்டத்தில் மறைந்திருந்த கும்பல் ஒன்று பொன்ராஜை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் ஊராட்சித் தலைவர் பொன்ராஜ்.

கொப்பன்பட்டி காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பொன்ராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் குற்றச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக இரு சிறுவர்களைப் பிடித்துள்ள போலீஸார், மேலும் இருவரைத் தேடிவருகின்றனர்.

‘தலப்பா’ என உள்ளூர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் பொன்ராஜ் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுப்பவர். தலையில் எப்போதுமே தன் மானம், சுய மரியாதையின் அடையாளமாக தலப்பா கட்டியிருப்பதால் இவருக்கு இந்தப் பெயர்வந்தது. அதேபோல் இதே திட்டங்குளம் ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சித் தலைவராகவும் உள்ளார் பொன்ராஜ். கோவில்பட்டியில் மாவீரர் சுந்தரலிங்க தேவேந்திரனாரின் முழு உருவச்சிலை அமையவும் இவரே காரணமாக இருந்ததாக நினைவு கூறுகிறார்கள் கோவில்பட்டி மக்கள். சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திலும் பொன்ராஜுக்கு சிலரோடு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இவருக்கு கையெழுத்துப்போடவும் அழுத்தம் கொடுத்தனர். இதனால் போலீஸார் இதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தில் சிறுவர்கள் சிக்கியிருந்தாலும், அவர்களை கூலிப்படையாக பயன்படுத்தி பின்னால் இருந்து இயக்கியது யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in