மகனுடன் பைக்கில் சென்ற மூதாட்டி கீழே விழுந்து பலி: துரத்திய வந்த நாயால் துயரம்

மகனுடன் பைக்கில் சென்ற மூதாட்டி  கீழே விழுந்து பலி: துரத்திய வந்த நாயால் துயரம்

தன் மகனுடன் பைக்கில் பின் சீட்டில் அமர்ந்து சென்ற மூதாட்டி, சாலையோர தெருநாய் துரத்தியதால் அந்த பதற்றத்தில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், செட்டியார்பட்டி முத்துசுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் சித்திரை கனி. இவரது மனைவி பூசணம்(60). இவர் தன் உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக தன் மகனுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். அங்குள்ள ஆசிரியர் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் படுத்திருந்த நாய் ஒன்று, பைக்கைப் பார்த்ததும் குரைத்ததுடன் பின்னால் விரட்டி வந்தது.

பின் சீட்டில் இருந்த பூசணத்தின் மிக அருகிலேயே தெருநாய் துரத்திக்கொண்டே ஓடிவந்தது. இதனால் பூசணம் மிகவும் பதற்றமடைந்தார். இதில் நிலைதடுமாறி பின் சீட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் பின் தலையில் காயம் ஏற்பட்டு சேத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்ட பூசணம் சிகிச்சைப் பலனின்றி நேற்று நள்ளிரவு உயிர் இழந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செட்டியார்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவில் சுற்றித்திரியும் தெருநாய்கள் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் தருவதாகவும், தெருநாய்களைப் பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in