எங்களைக் கருணைக்கொலை செய்யுங்க கலெக்டர்; கதறித்துடித்த முதிய தம்பதி: காரணம் என்ன?

ஆட்சியர் அலுவலக வாயிலில் தம்பதியின் தர்ணா
ஆட்சியர் அலுவலக வாயிலில் தம்பதியின் தர்ணா

தங்களது சொத்துக்களை பறித்துகொண்டு, மகன்களால்  கைவிடப்பட்ட வயதான தம்பதியர் தங்களை கருணைக்கொலை செய்யுமாறு  வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்கசாமி(85), சாரதாம்பாள்(75). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். தங்கசாமி,  கடந்த 2009- ம் ஆண்டு தனது 4 மகன்களுக்கும் தங்களிடம் இருந்த விவசாய நிலத்தையும்,  மனையையும் தனித்தனியாக  பிரித்து கொடுத்துள்ளார். தனது மனைவியுடன் வயது முதிர்வு காலத்தை கழிப்பதற்காக ஒரு வீட்டை மட்டும் தமது பெயரில் வைத்திருந்தார்.

தங்கசாமியின் வீட்டை  பெரிய மகன்  எடுத்துக் கொண்டதால், அவரை பராமரிக்க மற்ற மகன்களும் மறுத்துவிட்டனர். அதனால் முதிய தம்பதியர் இருவரும் அருகில் உள்ள வீட்டு வாசலிலும், பேருந்து நிலையத்திலும்  தங்கி காலத்தை கழித்து வருகின்றனர். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் தம்பதியினர் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் மனவேதனை அடைந்த தம்பதியினர்  மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குவந்த போலீஸார்  தம்பதியினரைச் சமாதானப்படுத்தி குறைதீர் கூட்ட அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த ஆட்சியர் லலிதாவிடம், எங்கள் சொத்துக்களை மீட்டு தராததால், வாழ வழியின்றி தவிக்கும் எங்களை கருணைக்கொலை செய்ய வலியுறுத்தி  மனு அளித்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை சமாதானப்படுத்தினார்.  மயிலாடுதுறை  கோட்டாட்சியரிடம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in