
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பனை தினசரி தரிசிக்க வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது கடந்த மாதம் 16-ம் தேதி மாலையில் திறக்கப்பட்டது. இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் எருமேலி, புல்மேடு பாதை வழியாக 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் தினசரி கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருவதால் பக்தர்களின் பாதுகாப்புகருதி ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை தினசரி சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை உறுதி செய்யும் வகையில் இணைய வழியில் முன்பதிவு செய்துவிட்டு வருவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் பம்பை, நிலக்கல் உள்ளிட்டப் பகுதிகளில் ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
இன்று சபரிமலை தரிசனத்திற்கு 93,600 பேர் இதுவரை புக் செய்துள்ளனர். இதுபோக பலரும் பம்பை, நிலக்கல் பகுதிக்கு வந்துவிட்டு ஸ்பாட் புக்கிங் செய்வார்கள் என்பதால் இந்த எண்ணிக்கை இன்றே ஒரு லட்சத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இதுவரை ஒரு லட்சத்து 4,200 பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல் வரும் 12-ம் தேதி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இதுவரை 1,03,716 பேர் இணைய வழியில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மண்டல மகரவிளக்கு காலத்தில் தொடர்ச்சியாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானபேர் தரிசனத்துக்கு வருவது இப்போது ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வசதிகள் செய்துதர கேரள அரசு, பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.