
புதியவகை வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வரும் 10-ம் தேதி, ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிகமானோர் வெளிநோயாளிகளாகவும், சிலர் உள்நோயாளியாகத் தங்கியும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாகத் தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி, சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடக்கும். தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 200 முகாம்கள் நடக்கிறது. வார்டுக்கு ஒரு முகாம் என்னும் அடிப்படையில் இந்த காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும்.
அதேபோல் இப்போது வைரஸ் தொற்று பரவும் காலம் என்பதால் கூட்டங்களைத் தவிர்த்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றையும் மக்கள் பின்பற்ற வேண்டும்”என்றார்.