
தென்காசி மாவட்டத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளைக் கொண்டாடிய புதுமாப்பிள்ளையை அவரது தாய் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(35) இவருக்கு கடந்த ஆறுமாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தங்க மாரியப்பன் தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினியின் திரைப்படங்களை தவறவே விடமாட்டார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளை தன் ஊரைச் சேர்ந்த நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தங்க மாரியப்பன்.
அப்போது அங்கு வந்த அவரது தாய் உனக்குத் திருமணம் முடிந்துவிட்டது. இன்னும் பொறுப்பில்லாமல் நடிகரின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறாயே எனத் திட்டினார். இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட தங்க மாரியப்பன் கடந்த 14-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் அருந்தினார். அக்கம், பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த தங்க மாரியப்பனை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி தங்க மாரியப்பன் இன்று உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பாவூர் சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.