வெளிநாடு செல்வதற்காக திட்டமிட்டு வந்த செவிலியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், வெட்டுக்காட்டுவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார். இவரது மனைவி ராஜீவ்காந்தி(34) பி.எஸ்சி நர்சிங் படித்துள்ள இவர், மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக உள்ளார். இதனால் தன் கணவர் சஞ்சய்குமாருடன் அங்கு தங்கி இருந்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை.
ராஜீவ்காந்தி வெளிநாட்டில் நர்ஸ் வேலைக்குச் செல்ல விரும்பினார். இதற்காக பாஸ்போர்ட் எடுக்க அவர் மட்டும் ஊருக்கு வந்திருந்தார். சொந்த ஊரில் தன் வீட்டில் நேற்று இரவு தூங்கியவர், இன்று காலையில் வெகுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால் அவரது சகோதரர் ஜெயசீலன் கதவைத் திறந்து பார்த்தபோது ராஜீவ்காந்தி அசைவற்ற நிலையில் கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ராஜீவ் காந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சொந்த ஊருக்கு வந்த நர்ஸின் மர்ம மரணம் குறித்து தக்கலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.