போலீஸை கண்காணித்த கும்பல்; இரவு 2 மணிக்கு இன்னோவா காரில் வந்து கொள்ளை: திருடர்களை தேடும் தனிப்படை

கொள்ளை நடந்த நகைக்கடையில் மோப்ப நாய்
கொள்ளை நடந்த நகைக்கடையில் மோப்ப நாய் போலீஸை கண்காணித்த கும்பல்; இரவு 2 மணிக்கு இன்னோவா காரில் வந்து கொள்ளை: திருடர்களை தேடும் தனிப்படை

சென்னையில் நகைக்கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருவதாக கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பேப்பர்மில்ஸ் சாலையில் உள்ள ஜே.எல் கோல்டு பேலஸ் நகைக்கடையின் இரும்பு ஷட்டரை வெட்டிங் மிஷின் மூலம் வெட்டி உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த சுமார் 5 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்க நகை, வைரங்களை கொள்ளையடித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீதர் இது குறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா ஹாட் டிஸ்க்கையும் திருடி சென்றதால் கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பின்னர் போலீஸார் சுற்றுவட்டராப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் மேற்கோண்டு வருகின்றனர்.

கொள்ளை நடந்த நகைக்கடையில் விசாரணை
கொள்ளை நடந்த நகைக்கடையில் விசாரணை

இதற்கிடையே வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் இரவு இரண்டு மணிக்கு இன்னோவா காரில் வந்த கும்பல் ஒன்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் ஆணையர் அன்பு, இன்று அதிகாலை நகைக்கடையில் ஷட்டர் வெல்டிங் மூலம் அறுத்து 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வந்தது. சம்பவ இடத்தில் கைரேகை பதிவுகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடையின் ஊழியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறது.

கொள்ளை நடந்த நகைக்கடை
கொள்ளை நடந்த நகைக்கடை

நகைக்கடைகள், வங்கிகள் போன்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த சாலைகளில் காவல்துறை ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். காவல்துறை ரோந்து வராத நேரத்தை பார்த்து கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in