
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க சென்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் சிலம்பம் வைத்து ஆடிய காட்சி வைரல் ஆகி வருகிறது.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று மாலை நடந்தது. இதை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சிலம்பம் போட்டியை தொடங்கிவைத்த அமைச்சர் மனோதங்கராஜ் மாணவர் ஒருவரிடம் இருந்து சிலம்பத்தை வாங்கி மிக வேகமாகச் சுற்றத் தொடங்கினார். ஆட்சியர் அரவிந்த், எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட பலரும் இதைப் பார்த்து கைதட்டி உற்சாகம் அடைந்தனர்.
இந்தநிலையில் இதை அங்கு இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இதே வீடியோவை அமைச்சர் மனோதங்கராஜ்ம் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இப்போது வைரல் ஆகி வருகிறது. அடிமுறை, வர்மம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பர்யக் கலைகளின் மீது அமைச்சர் மனோதங்கராஜிக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.