`வருமானம் போதுமானதாக இல்லை; ஆடம்பர வாழ்க்கைக்காக திருடினேன்'- சிக்கிய ரீல்ஸ் பிரபலம் வாக்குமூலம்

அமீஷா குமாரி
அமீஷா குமாரி`வருமானம் போதுமானதாக இல்லை; ஆடம்பர வாழ்க்கைக்காக திருடினேன்'- சிக்கிய ரீல்ஸ் பிரபலம் வாக்குமூலம்

ஆரம்பட வாழ்க்கை வாழ்வதற்காக வீடுகளில் கொள்ளையடித்த ரீல்ஸ் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி-மாலதி தம்பதியர். சபாபதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சபாபதி காலையில் வேலைக்குச் சென்றுள்ளார். அதேபோல் அவரது மனைவி மாலதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். 

மாலதி மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போனது தெரியவந்தது. பூட்டியிருந்த வீட்டில் பூட்டை உடைக்காமல் நகை, பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கணவன் பணம், நகை எடுத்து இருப்பாரோ என்று நினைத்து அவரிடம் கேட்டபோது அவர் எடுக்கவில்லை என்று கூறியதும் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கண்காரணை குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீஸார் மாலதி வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

அப்போது இளம்பெண் ஒருவர் ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் மாலதி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரிக்கலாம் என்று எண்ணிய போது வாகனத்தின் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததால் இந்தப் பெண்மணி நகையைத் திருடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை தொடங்கினர்.

கைது செய்யப்பட்ட அமீஷா குமாரி
கைது செய்யப்பட்ட அமீஷா குமாரி

பின்னர் மூன்று நாட்களாக தொடர்ந்து 47 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் டிக் டாக் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமாகி வரும் அமீஷா குமாரி தான் நகை திருடியது என்பது தெரியவந்தது.

போலீஸார் அமீஷா குமாரியை விசாரிக்க அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்வதற்காக வீட்டுக்குள் ரீல்ஸ் செய்து கொண்டிருந்துள்ளார். அவரிடம் சென்று போலீஸார் கேட்ட போது தான் எந்த நகையும் பணமும் திருடவில்லை என்றும் ரீல்ஸ் செய்து மாதம் 15 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதித்து வருவதாகவும் தனக்கு திருட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் காண்பித்து அவரை போலீஸார் விசாரணை செய்ததில் உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சென்று பல பிரபலங்களோடு ரீல்ஸ் செய்து பிரபலமாகிவிட்டேன். இதில் கிடைக்கும் வருமானம் ஆரம்பரமாக இருப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதால் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் நகை, பணம் எங்கே என்று கேட்டபோது பணம் முழுவதும் ஒரு மணி நேரத்தில் செலவு செய்துவிட்டதாகவும் நகையை மட்டும் பத்திரமாக ஃப்ரீட்ஜில் வைத்திருப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் ஃப்ரீட்ஜில் வைத்திருந்த நகையை எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். 

பின்னர் போலீஸார் அவரை கைது செய்து பெருங்களத்தூர் பீர்க்கண்காரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று மேலும் விசாரணை தொடங்கிய போது கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பாக சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி ஓஎல்எக்ஸ் மூலமாக விற்பனை செய்து அதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்து செல்லும் போது தான் ஒரு பிரபலம் என்னுடைய புகைப்படத்தை குற்றவாளி என்று தெரிவிக்க வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக்கொண்டார். ரிலீஸ் செய்து கொண்டிருந்த இளம்பெண் தற்போது திருட்டு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in