
பாமக நிறுவனர் ராமதாஸ் வருகையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸார் பயன்படுத்திய அறுதப் பழசான வாகனம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தமிழ் மொழியை காத்திட தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளும் மருத்துவர் ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதிக்கு நேற்று வந்தார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடியில் அவரது வருகைக்காக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் இருந்து அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்காடு வந்திருந்த போலீஸார் பயன்படுத்திய வாகனம் தான் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. தற்போது புழக்கத்திலேயே இல்லாத 20 வருடங்கள் பழமையான வேனை அவர்கள் பயன்படுத்தினர்.
அந்த வாகனத்தின் மேற்புரம் சிதைந்தும், கதவு கைப்பிடிகள் இன்றியும் இருந்தது. இந்த வேனில் ஏறி 15-க்கும் மேற்பட்ட போலீஸார் மருத்துவர் ராமதாஸை பின் தொடர்ந்தனர். பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த அந்த வாகனத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
15 வருடங்களுக்கு மேல் உள்ள அனைத்து வாகனங்களையும் முறையாக பராமரிக்காமல் பயன்படுத்தக்கூடாது என விதிகள் இருந்தும் 20 வருடங்களுக்கு மேலான பராமரிப்பு இல்லாத இந்த வாகனத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனியார் வாகனங்களை ஆய்வு செய்து முறையான பராமரிப்பு இல்லை என்றால் அபராதம் விதிக்க வேண்டிய காவல்துறையினரின் வாகனமே இப்படி பரிதாபமான நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு வாகனத்திவ் செல்லும் காவலர்களோ அல்லது சாலையில் செல்லும் பொது மக்களுக்கோ பாதிப்பு ஏற்படும் முன் இந்த பழைய வாகனத்தை அப்புறப்படுத்தி காவல் துறைக்கு புதிய வாகனம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.