அடகுவைக்க நகை தராததால் உறவுக்காரப் பெண் கொலை: குற்றவாளி போலீஸிடம் சிக்கியது எப்படி?

அடகுவைக்க நகை தராததால் உறவுக்காரப் பெண் கொலை: குற்றவாளி போலீஸிடம் சிக்கியது எப்படி?

இரவலாக அடகுவைக்க நகை தராததால் உறவுக்காரப் பெண்ணைக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், செல்வ மருதூரைச் சேர்ந்தவர் ஜான் ஷாபிவி(48). இவர் விவாகரத்து ஆனவர். இவர் வழக்கமாக வீட்டை அதிகாலையிலேயே திறந்து வெளியில் வருவார். ஆனால் இவர் வெளியில் வராமல் இருந்ததால் அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் போய்ப் பார்த்தனர். அங்கே ஜான் ஷாபிவி பிணமாகக் கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது காதிலும் காயம் இருந்தது.

இதனைத்தொடர்ந்து திசையன்விளை போலீஸார், ஜான் ஷாபிவியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து ஜான் ஷாபிவியின் வீட்டிற்கு அடிக்கடி வரும் அவரது உறவினர் அப்துல்காதர்(45) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் அப்துல்காதரின் பாக்கெட்டில் ஷாபிவியின் நகைகளின் சிறுபகுதி இருந்தது.

இதனைத் தொடர்ந்து அப்துல்காதர் போலீஸாருக்குக் கொடுத்த வாக்குமூலத்தில், “ எங்கள் பக்கத்து ஊரான பெட்டைகுளத்தில் கந்தூரி விழா நடந்தது. இதில் கலந்துகொள்ள அந்தப்பகுதிவாசிகள் அனைவரும் போய்விட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜான் ஷாபிவி வீட்டுக்குச் சென்றேன். அடகுவைக்க அவரது நகைகளைக் கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை. இதனால் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றேன். தொடர்ந்து நகைகளையும், அவரது செல்போன், மெமரிகார்டையும் எடுத்தேன். இதில் மெமரி கார்டை தீவைத்துக் கொளுத்திவிட்டேன்.

நகைகளைத் திசையன்விளை_ராதாபுரம் சாலையில் மண்ணில் புதைத்து வைத்தேன். அதில் சிறிதளவு நகைத்துண்டு என் பேண்ட் பாக்கெட்டில் கிடந்ததால் சிக்கிவிட்டேன் ”எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in