அண்ணன், தங்கை உறவால் பெற்றோர் எதிர்ப்பு: காதலியை கொன்று உயிரை மாய்த்த காதலன்

பவித்ரா
பவித்ரா

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சகோதரி முறை கொண்டவரை காதலித்த இளைஞர்,  அவரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

துரைக்கண்ணு
துரைக்கண்ணு

ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி ஊராட்சி மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் துரைக்கண்ணு(35). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினர்  பன்னீர்  என்பவரின் 20 வயதுடைய மகள் பவித்ராவை காதலித்துள்ளார்.  ஆனால் இருவரும் அண்ணன், தங்கை  உறவு  முறையாக இருப்பதால் இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும்,  உறவினர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் இன்று பவித்ராவின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது  அங்கு சென்ற துரைக்கண்ணு,  வீட்டில் தனியாக இருந்த பவித்ராவிடம்  தகராறு செய்துள்ளார். பின்னர், பவித்ராவின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலியைக் கட்டியுள்ளார். பின்னர் கத்தியால் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.  இதையடுத்து, தன்னுடைய வீட்டுக்கு சென்ற  துரைக்கண்ணு மனவேதனையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

உறவினர்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு வந்த  ஆலங்குடி போலீஸார் இருவரது உடல்களையும்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in