மனைவி தூக்கில் தொங்கவில்லை; கொலை செய்யப்பட்டுள்ளார்: 2-வது கணவரை சிக்கிவைத்த போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்

கொலை
கொலை மனைவி தூக்கில் தொங்கவில்லை; கொலை செய்யப்பட்டுள்ளார்: 2-வது கணவரை சிக்கிவைத்த போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்

கோவையில் மனைவியின்  கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய கணவர் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் நீலிக்கானாம்பாளையம் மதுரைவீரன் கோயில் பகுதியை சேர்ந்தவர் அனிதா(42). மருத்துவமனை துப்புரவு தொழிலாளி. இவரது கணவர் குமார். இவர்களுக்கு கார்த்திக் (22) என்ற மகன் உள்ளார். கணவர் பிரிந்து சென்ற நிலையில், அனிதா கடந்த 8 ஆண்டுக்கு முன் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை (48) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். 

அனிதா, தனது கணவருடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். கடந்த 13-ம் தேதி இரவு வீட்டில் இருந்த அனிதா மது குடித்துள்ளார். இவர் மகன் கார்த்திக் லேத் ஒர்க் ஷாப் வேலைக்கு சென்றுவிட்டார். இரவில் வெளியே சென்றிருந்த சின்னதுரை வீட்டிற்கு வந்தார். அப்போது அனிதாவுக்கும் சின்னதுரை இடையே ஏற்பட்டுள்ளது. தகராறில் சின்னதுரை அனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக தெரிகிறது. இதை மறைக்க, சேலையில்  அனிதாவை  தூக்கு மாட்டி தொங்கவிட்டு சென்றுவிட்டார்.

மறுநாள் காலை அனிதாவின் தம்பி முத்து என்பவர் வீட்டிற்கு வந்த போது அனிதா இறந்த நிலையில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் முகத்தில் தாக்கியிருப்பதும், கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பதும், மூச்சு திணற செய்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 

இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வந்தநிலையில், சின்னதுரை திடீரென மாயமானார். போலீஸார் அவரை தேடி வந்த நிலையில் இன்று காலை சிங்காநல்லூரில் சிக்கினார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில்  அனிதாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in