10 கோடி பரிசு விழுந்துவிட்டது... லாட்டரி சீட்டை வாங்கியது யார்?: தேடும் கேரள அரசு அதிகாரிகள்

லாட்டரி சீட்டு
லாட்டரி சீட்டு

மலையாள புத்தாண்டு தினமான விஷூ தின சிறப்பு லாட்டரியில் பத்துகோடி ரூபாய் பரிசு விழுந்தவர், இதுவரை பரிசுத்தொகையை வாங்க வரவில்லை. யார் அந்த அதிர்ஷ்டசாலி? ஏன் இன்னும் வாங்க வரவில்லை என மக்கள் மத்தியில் பெரும் பேச்சுப்பொருளாக எழுந்துள்ளது.

கேரளத்தில் அம்மாநில அரசே லாட்டரி சீட்டு விற்பனையைச் செய்துவருகிறது. அங்கு தினம் தோறும் 70 லட்ச ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டு குலுக்கல் நடக்கிறது. 70, 80 லட்ச ரூபாய் பரிசுத்தொகை கொண்ட லாட்டரி சீட்டுகள் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லாட்டரி சீட்டுகள் விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு, ஏழைக்குழந்தைகளின் கல்விச் செலவு, அன்னதானத் திட்டம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், ஓணம், பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விசேஷங்களின் போது பத்துகோடி ரூபாய் பரிசுச்சீட்டு லாட்டரியும் நடத்தப்படுவது வழக்கம்.

இதில் மலையாள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட விஷூ பம்பர் லாட்டரி விற்கப்பட்டது. இதன் குலுக்கல் கடந்த 22 -ம் தேதி நடைபெற்றது. இதில் ஹச்.பி 727990 என்ற எண்ணுக்கு முதல்பரிசான பத்துகோடி ரூபாய் விழுந்தது. ஆனால் வழக்கமாக திருவனந்தபுரத்தில் இருக்கும் கேரள லாட்டரி அலுவலகத்தில் பரிசு கிடைத்த ஓரிரு நாளில் வெற்றியாளர் லாட்டரி சீட்டோடு வந்துவிடுவது வழக்கம். ஆனால் 10 கோடி ரூபாய் லாட்டரி சீட்டோடு இதுவரை யாரும் வரவில்லை. குலுக்கல் முடிந்து 5 நாள்கள் ஆகியும் இதுவரை யாரும் வராததால் லாட்டரியில் பரிசு விழுந்தவர் இன்னும் முடிவையே பார்க்காமல் இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரளத்தின் பழவக்காடி பகுதியில் உள்ள சைதன்யா லக்கி செண்டர் மூலம் விற்பனையான இந்த லாட்டரியை அங்கிருந்து சில்லறை வணிகரான ரங்கன் என்பவர் வாங்கி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அருகே விற்றுள்ளார். இதனால் லாட்டரியை வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்லும் வழியில் யாரேனும் வாங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கோடியில் பரிசு விழுந்தது தெரியாமல் யாரிடம் அந்தப் பரிசுச்சீட்டு இருக்கிறதோ என மலையாளிகள் புலம்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in