`தன்னாட்சி அதிகாரத்தில் அரசு தலையிட முடியாது'- கூட்டுறவு ஊதிய நிர்ணய சுற்றறிக்கையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

`தன்னாட்சி அதிகாரத்தில் அரசு தலையிட முடியாது'- கூட்டுறவு ஊதிய நிர்ணய சுற்றறிக்கையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் 28.2.2014-ல் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்டம், ஆதிநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.செல்வகுமார், மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செல்லையாநாடார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.  அந்த மனுவில், ''கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கையை ரத்து செய்து, கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஊதியம் மற்றும் பணப்பலன்கள், பணி நியமனம் விவகாரத்தில் கூட்டுறவு சங்கங்களே முடிவெடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி இன்று  பிறப்பித்த உத்தரவில், இந்தியாவில் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த மத்திய அரசு பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் குழு அமைத்தது. இந்தக்குழு கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளை அரசிடம் வழங்கியது. இந்த பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன. 

இந்த பரிந்துரை அடிப்படையில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களும் தன்னாட்சி பெற்ற குறுகிய கால கடன் அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு, ஊழியர்கள் நியமனம், ஊதிய நிர்ணயம், பணப்பலன் குறித்து முடிவெடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கூட்டுறவு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கை கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடும் வகையில்  உள்ளதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கையில் தன்னாட்சி அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் பணியாளர் நியமனம், ஊதியம், பணப்பலன் நிர்ணயம் ஆகியவை அடங்கும். தன்னாட்சி அதிகாரத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரோ, அரசோ தலையிட முடியாது. இதனால் பதிவாளரின் சுற்றறிக்கை விதி மீறலாகும். கூட்டுறவு சட்டத்துக்கு எதிரானது. 

கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க நிர்வாகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இதனால் கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதியம் நிர்ணயம் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in