தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு 3 நாட்கள் தடை

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு 3 நாட்கள் தடை

தேவர் ஜெயந்தி விழா காரணமாக தென் மாவட்டங்களில் கோயில் விழாக்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் அக். 30, 31 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், " ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜை 30-ல் நடைபெறுகிறது. இதனால் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும்" என்றார்.  

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர்கள் வாதிடுகையில், " கோயில் விழாக்களில் பல ஆண்டுகளாக ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இதனால் அனுமதி வழங்க வேண்டும்' என்றனர். 

இதையடுத்து நீதிபதி," போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் 30,  31 மற்றும் நவம்பர் 1 தேதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க முடியாது.   மனுதாரர்கள் வேறு தேதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த மனு அளிக்கலாம். அவ்வாறு மனு அளித்தால் அதை போலீஸார் சட்டப்படி பரிசீலித்து அனுமதி வழங்குவது  குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in