விரைவாக நடவடிக்கை எடுக்க 2 ஆயிரம் லஞ்சம்: போலீஸ் சூப்பிரண்டுக்கு 18 மாத சிறைத் தண்டனை

விரைவாக நடவடிக்கை எடுக்க 2 ஆயிரம் லஞ்சம்: போலீஸ் சூப்பிரண்டுக்கு 18 மாத சிறைத் தண்டனை

2000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு ஒரு வருடம் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்த சண்முகம் என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு விடுப்பு கடிதம் கொடுக்காமலும், பல நாட்கள் பணிக்கு வராமலும் இருந்தார். இதனால் அவரது ஊதியத்தில் இருந்து மாதம் ரூ.500 வீதம் பிடித்தம் செய்து, அவரை ஓய்வு பெற அனுமதி வழங்கி 2008-ம் ஆண்டு  உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மத்திய மண்டல இணை காவல்துறை ஆணையர்  அலுவலம் மூலமாக தமிழ்நாடு அரசிடம் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உள்துறை செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? என்பதை தெரிந்துகொள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று விசாரித்தார்.

அப்போது, மனு மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அவரிடம் சூப்பிரண்டு  அசோக்குமார் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். 

இதை கொடுக்க விருப்பம் இல்லாத சண்முகம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்யவும், அவர்கள் சூப்பிரண்டு அசோக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என அசோக்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கஸ்தூரி ரவிச்சந்திரன் ஆஜராகி வாதிட்டார். விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘‘காவல்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளது. எனவே, அசோக்குமாரை குற்றவாளி என்று முடிவு செய்து அவருக்கு, 2 சட்டப் பிரிவுகளின் கீழ் ஓர் ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in