'நீ இருந்தும் ஜெயிலுக்கு அனுப்பிட்டீயே': அம்மனிடம் கோபம் கொண்டு கோயிலைப் பூட்டிய சாராய வியாபாரி

பூட்டு போடப்பட்ட அம்மன் கோயில்
பூட்டு போடப்பட்ட அம்மன் கோயில்

சாராயம் விற்றதால் போலீஸாரிடம் சிக்கி சிறைக்குச் சென்ற சாராய வியாபாரி,  திரும்பி வந்து அம்மன் இருந்தும் தன்னைச் சிறைக்கு அனுப்பி விட்டதே என்ற விரக்தியில் அம்மன் கோயிலை பூட்டு போட்டு பூட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரக்காணம் அருகே உள்ள கேசவ நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் ( 45).  இவர் அக்கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் போலீஸார் அடிக்கடி இவரை கைது செய்வது வழக்கம்.  கடந்த வாரமும் வழக்கம்போல் ஆதி கேசவனை மரக்காணம் போலீஸார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் திண்டிவனம் சிறையிலடைத்தனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு  ஆதிகேசவன் ஜாமீனில் வெளிவந்தார். ஊருக்கு வந்தவர்  விரக்தியில் “ நான் விற்கும் சாராயத்தை இதே ஊரை சேர்ந்தவர்கள் தான் குடிக்கின்றனர். அதேபோல் என்னை போலீஸாரிடம் இதே ஊரை சேர்ந்தவர்கள் தான் காட்டியும் கொடுக்கின்றனர்” என்று புலம்பியவர்  அங்கிருந்த  அம்மன் கோயிலுக்குச் சென்றார். இந்த அம்மன் இருந்தும் கூட என்னை ஜெயிலுக்கு அனுப்பி விட்டதே என்று கூறி அம்மன் கோயிலுக்கு  பூட்டு போட்டு பூட்டியுள்ளார்.

இதனால் பரபரப்படைந்த ஊர் மக்கள் இது குறித்து  மரக்காணம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து அங்கு வந்த போலீஸார், சாராய வியாபாரி ஆதிகேசவன் பூட்டிய பூட்டை உடைத்து கோயிலைத் திறந்துவிட்டனர். போலீஸார் வருவதைக் கண்டதும்  ஆதிகேசவன் மீண்டும் தலைமறைவானார்.  அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in