ஊருக்கு வரும்போதெல்லாம் காதல் தொல்லை; மறுத்தப் பெண்ணை வீடு புகுந்து கடத்த முயன்ற போலீஸ்காரர்: ஒருதலைக்காதலால் விபரீதம்

கைது
கைதுஒருதலைக்காதலால் இளம்பெண் கடத்தல்: போலீஸ்காரர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருதலைக் காதல் செய்துவந்த போலீஸ்காரர், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் அவரை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி. இவரது மகன் மாரியப்பன்(26). இவர் மணிமுத்தாறு பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவர் கடையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். ஆனால் அந்தப் பெண் காதலுக்கு சம்மதிக்கவில்லை. இருந்தும் ஒருதலையாக அந்தப் பெண்ணைக் காதலித்து வந்தார் மாரியப்பன். அண்மையில் அந்த இளம்பெண்ணுக்கு சுகாதாரத்துறையில் வேலை கிடைத்தது. தர்மபுரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார மையத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் மாரியப்பன் காதல் தொல்லை கொடுத்துவந்தார்.

போலீஸ்காரர் மாரியப்பன் அந்த இளம்பெண்ணின் வீட்டிலும் போய் பெண் கேட்டார். ஆனால் அவரும், அவரது குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு இன்னொரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த மாரியப்பன் நேற்று இரவு பட்டாலியன் பிரிவில் தன்னோடு பணிசெய்யும் காவலர் மற்றும் தன் ஊர் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்றார். அந்தப் பெண்ணைக் கடத்தும் நோக்கத்தில் காரில் ஏற்றினார். அப்போது அப்பகுதிவாசிகள் காரோடு அவர்களைச் சுற்றிவளைத்தனர்.

அப்போது அங்கு இருந்தவர்களுக்கு மாரியப்பன் கொலை மிரட்டலும் விடுத்தார். இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு கடையம் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வந்ததும், மாரியப்பனோடு இருந்த அவரது நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். மாரியப்பனைக் கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in