ராகுல் காந்திக்கு அளித்த தீர்ப்பை மாற்ற மறுத்த நீதிபதி இடமாற்றம்!

ராகுல் காந்திக்கு அளித்த தீர்ப்பை மாற்ற மறுத்த நீதிபதி இடமாற்றம்!

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியை பாட்னா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தான் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ராகுலின் தகுதி இழப்பு உறுதிசெய்யப்படும் நிலை உருவானது.

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.

இதையடுத்து, ஏப்ரல் 3-ம் தேதி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதி ஆர்.பி.மொகேரா ஏப்ரல் 20ம் தேதி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை ஜூலை 7ம் தேதி நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ஷெசன் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்து தள்ளுபடி செய்தார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, எந்த அடிப்படையில் 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கினீர்கள் என்று விளக்கம் அளிக்கக் கோரி சூரத் கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதனிடையே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 9 பேரை வேறு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் கடந்த 3ம் தேதி ஆலோசனை நடத்தியது. இதில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி குமாரி கீதா கோபி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக்கை பாட்னா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும் உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது.

இதேபோல நீதிபதிகள் அல்விஷ் போச்சே, அரவிந்த் சிங் உள்ளிட்ட 6 பேரையும் பிற மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in