இந்திய கடற்படையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய கடற்படையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு, அவர்களைக் கடுமையாக தாக்கிய இந்திய கடற்படையினரைக்  கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்  மயிலாடுதுறையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடந்த 21-ம்  தேதியன்று மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் உள்ளிட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது  இந்திய கடற்படையினர் சந்தேகத்தின் பெயரில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் வீரவேல் என்ற மீனவருக்கு முழங்கால்,  வயிறு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூரத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல்  படகை வழிமறித்த இந்திய கடற்படையினர் அதில்  இருந்த மீனவர்களை மிகக் கடுமையாக  தாக்கினர்.  படகில் இருந்த மீனவர்கள் தங்களது ஆதார் கார்டு உள்ளிட்ட  அடையாளங்களை  காண்பித்த பிறகும் தொடர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வேதாரண்யம்  கடலோர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய கடற்படையைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரண வழங்க வேண்டும்.  இது போன்ற தாக்குதலைத் தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்  என்பதை  வலியுறுத்தி  மாவட்ட செயலாளர் அறிவழகன்  தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in