குடிபோதையில் மனைவியைக் குத்திக்கொலை செய்த கணவன்: திருமண நாளன்று நடந்த பயங்கரம்

ரேவதி
ரேவதி

தன்னைப் பிடிக்காமல் பிரிந்து வாழ்ந்த மனைவியை  திருமண நாளில் கத்தியால் குத்தி கணவன் கொலை செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த தம்பதியர் அருள்( 49),  ரேவதி( 43). இவர்களுக்கு கடந்த  1997-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இவர்களது மகன் தீபன்ராஜ்(24) மென்பொருள் பொறியாளராக  சென்னையில் பணியாற்றி வருகிறார். மகள் ரிருத்திகா கல்லூரியில் பயின்று வருகிறார். 

அருள் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால் ரேவதி கடந்த 1 வருடமாக கணவனைப் பிரிந்து கூறைநாடு விஸ்வநாதபுரத்தில் வசிக்கும் தாய் மல்லிகா வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில்  நேற்று அருள், ரேவதியின் திருமண நாள்.  அதனால் அருள் நேற்று இரவு மாமியார் வீட்டிற்குச் சென்று ரேவதியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ரேவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.  அப்படி என்றால் உன்னுடைய உடமைகளை உடனே வந்து எடுத்துச் செல் என்று அருள் கூறியிருக்கிறார்.

இதையடுத்து ரேவதி புறப்பட்டு அருளின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.  ஆனால் வழியில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேவதியைக் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். 
அக்கம் பக்கம் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ரேவதியை   சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்   சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து அருளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

25 ஆண்டுகள்  தன்னுடன் இல்லறம் நடத்திய தனது மனைவியை குடிபோதைக்கு அடிமையான கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in