சுற்றுலா அழைத்துச் சென்று மனைவியைக் கொன்ற கணவன்: நண்பனுடன் சேர்ந்து உடலை காட்டுப்பகுதியில் புதைத்த கொடூரம்

சுற்றுலா அழைத்துச் சென்று மனைவியைக் கொன்ற கணவன்: நண்பனுடன் சேர்ந்து உடலை காட்டுப்பகுதியில் புதைத்த கொடூரம்

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சுற்றுலா அழைத்துச் சென்று அவரை கொன்று புதைத்த கணவனும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிஹார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரிதிவிராஜ். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி ஜோதிகுமாரியுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.

திருமணத்தின் போது தனக்கு 28 வயது தான் ஆகிறது என்று அவரது மனைவி ஜோதிகுமாரி கூறியுள்ளார். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே ஜோதிகுமாரிக்கு வயது 38 என்பது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளளது.

இந்த நிலையில் ஜோதிகுமாரி அடிக்கடி தொலைபேசியில் யாரிடமோ பேசியது பிரிதிவிராஜ்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தன் மனைவி யாருடனோ தொடர்பு வைத்துள்ளார் என்ற அந்த சந்தேகம், மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது. இதற்காக பிஹாரைச் சேர்ந்த அவரது நண்பர் சமீர்குமாரை பெங்களூருக்கு பிரிதிவிராஜ் அழைத்து வந்துள்ளார்.

தனது மனைவியை உடுப்பியில் உள்ள மால்பே பகுதிக்கு பிரிதிவிராஜ் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார். இவர்களுடன் காரில் சமீரும் சென்றுள்ளார். சுற்றுலா முடிந்து காரில் வரும் போது ஜோதிகுமாரியை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து அவர்கள் இருவரும் கொலை செய்தனர். இதன் பின் ஜோதிகுமாரியின் உடலைக் காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

இதையடுத்து ஊர் திரும்பிய பிரிதிவிராஜ், மூன்று நாட்கள் கழித்து தனது மனைவியைக் காணவில்லை என காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பிரிதிவிராஜ் பேசியதால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் உரிய முறையில் விசாரித்த போது தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜோதிகுமாரியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிரிதிவிராஜ் மற்றும் அவரது நண்பர் சமீரையும் நேற்று கைது செய்தனர். சந்தேகத்தால் தனது மனைவியை கணவனே கொலை செய்து புதைத்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in