மனைவியைக் கொலை செய்து உடல் முழுவதும் மசாலா தடவிய சைக்கோ கணவன்: ஆன்லைன் சூதாட்டம் வாங்கிய காவு!

சிவரஞ்சனி
சிவரஞ்சனி

தன் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன், அவரது உடலில் மசாலா தடவி கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சமயபுரம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் நரசிம்மராஜ் (37). இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மீது பல வழக்குகளும் உள்ளதாக தெரிகிறது. இவரது மனைவி சிவரஞ்சனி(28). இவர்களுக்கு பிரதிக் ஷா (10), ரக் ஷா (8) இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

நரசிம்மராஜுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தனது சொந்த வீட்டைக் கூட விற்று சூதாடி பணத்தை இழந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் நரசிம்மராஜ், ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று இரண்டு குழந்தைகளையும் அங்கு விட்டுள்ளார். தனது மனைவி சிவரஞ்சனிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறும், கரோனா சரியானவுடன் வந்து அழைத்து செல்வதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் திருச்சியில் உள்ள சிவரஞ்சனியுடன் தினமும் அலைபேசியில் பேசும் அவரது அக்கா சசிகலா கடந்த 3 நாட்களாக சிவரஞ்சனியைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்திருக்கின்றார். அதனால் என்னவோ ஏதோ என்று பதறி கொண்டு நேற்று நேரில் புறப்பட்டு அவரைப் பார்ப்பதற்காக தாளகுடி சாய் நகருக்கு தனது கணவரோடு வந்துள்ளார். அங்கு வீடு பூட்டிக்கிடந்துள்ளது.

அதனையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே கட்டிலுக்குக் கீழே சிவரஞ்சனியின் கால்கள் மட்டும் தொிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உரிமையாளரிடம் மாற்றுச் சாவி வாங்கி வீட்டைத் திறந்து பார்த்தனர். அங்கே அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கட்டிலுக்கு கீழே பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் சிவரஞ்சனியின் பிணம் கிடந்துள்ளது.

இது குறித்து உடனடியாக அவர்கள் கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட சிவரஞ்சனியின் உடலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவை தடவப் பட்டிருந்தது தெரியவந்தது. கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபடுவதைக் கண்டித்ததால் தனது மனைவியை நரசிம்மராஜ் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொிய வந்துள்ளது. தலைமறைவாகியுள்ள நரசிம்மராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in