ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை; மருமகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தாய்மாமன்: கண்கலங்க வைத்த சோகம்

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை; மருமகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தாய்மாமன்: கண்கலங்க வைத்த சோகம்

ஆம்புலன்ஸ் தரமறுத்ததால் இறந்த சிறுமியின் உடலை தோளில் சுமந்தவாறு செல்லும் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேசம் சத்தர்பூர் பகுதியில் உள்ள படான் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோரி. இவர் நேற்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது சகோதரி மகள் ப்ரீத்தி(4) தனது தோழிகளுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ப்ரீத்தியின் கால் சேற்றில் சிக்கியதால் அவர் மூழ்கினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் குளித்துக் கொண்டிருந்த அவரது மாமா கிஷோரி, ப்ரீத்தியை மீட்டு பிஜாவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியின் உடல்நிலை மோசமானது. இதனால் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன்றி ப்ரீத்தி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு கிஷோரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து கிராமத்திற்கு சிறுமியின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வேண்டும் என்று மாவட்ட மருத்துவமனை அதிகாரிகளிடம் கிஷோரி கேட்டுள்ளார். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் உள்பட யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

இதனால் வேதனையடைந்த கிஷோரி, ப்ரீத்தியின் உடலை தோளில் சுமந்தவாறு மருத்துவமனை பகுதியில் சுற்றியலைந்துள்ளார். பின் ப்ரீத்தியின் உடலைச் சுமந்தவாறு அவர் அங்கிருந்து வெளியேறினார். அங்கிருந்து பழைய பிஜவார் நாகாவிற்கு ஒரு காரில் சென்றார். அங்கிருந்து மருமகள் உடலுடன் தங்கள் கிராமத்திற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். ஆம்புலன்ஸ் வழங்க மறுத்த காரணத்தால் தோளில் சிறுமியின் உடலை சுமந்தவாறு சுற்றியலைந்த கிஷோரி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.

அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள், மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி லகான் திவாரி கூறுகையில்," இறந்த உடல்களைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வேலை. இதில் மருத்துவமனையையும் அதன் மருத்துவர்களையும் மக்கள் இழுக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இதே போல, சத்தர்பூரில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்தவரின் உடலை பைக்கில் கொண்டு சென்ற சம்பவமும் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு சிங்கராலி மாவட்டத்தில் இறந்த குழந்தையை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் தங்கள் குழந்தையை பைக்கின் பெட்டியில் வைத்து பெற்றோர் கொண்டு சென்ற அவலமும் நடந்தது. சுகாதார வசதியில் இந்தியா முன்னேறி விட்டது என்று கூறினாலும் மத்தியப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாத நிலை தொடர்ந்து கொண்டிருப்பது பெரும் வேதனை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in