கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர்: உயர்நீதிமன்ற நீதிபதி கண்டிப்பு

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர்: உயர்நீதிமன்ற நீதிபதி கண்டிப்பு

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்ளுங்கள் என மாணவியின் பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விருத்தாசலத்தை அடுத்த பெரிய நெசலூரை சேர்ந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி என்று இரவு அவர் மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இகுதுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். நீதிபதியின் அந்த உத்தரவில் மறுபிரேத பரிசோதனை செய்ய மருத்துவர் குழு ஒன்று அமைத்தும், பிரேத பரிசோதனையின்போது மாணவியின் தந்தை, அவரது வழக்கறிஞர் ஆகியோர் உடன் இருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தங்கள் தரப்பில் ஒரு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை மேல்முறையீடு செய்தார். அதனை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் இதே கோரிக்கையோடு அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மறு பிரேத பரிசோதனை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.

அத்துடன் மாணவியின் உடல் அடக்கம் குறித்து உயர் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவியின் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் மறு பிரேத பரிசோதனை முடிந்த மாணவியின் உடலை மாணவியின் பெற்றோர் பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரி காவல்துறை சார்பில் நேற்று உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

அந்த முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை இன்று தள்ளி வைத்திருந்தது. இன்று காலை நீதிமன்றம் கூடியதும் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவியின் பிரேத பரிசோதனை திரிக்கப் பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு தமிழக அரசின் தடயவியல் நிபுணர் ஆஜராகி விளக்கம் அளித்தார். மாணவியின் 2-வது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தடயவியல் நிபுணர் விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து நீதிபதி, மாணவி தரப்பு வழக்கறிஞரிடம், "ஒவ்வொரு முறையும் பிரச்சினை ஏற்படுத்துகிறீர்கள். இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள். இந்த விவகாரத்தில் அமைதியான தீர்வு காண வேண்டும். மாணவி மரண வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், "இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்த நீதிமன்றம், இந்நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்வதில் என்ன தாமதம்? என்று கேள்வி எழுப்பியது. மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர். அது மனுதாரருக்கே தெரியாமல் நடந்துள்ளது. மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். மாணவியின் இறுதிச் சடங்கை கண்ணியமாக நடத்துங்கள். அவரது ஆன்மா இளைப்பாறட்டும்" என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அத்துடன் மாணவியின் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்யும், உடற் கூராய்வு அறிக்கையோடு, உடற்கூராய்வு வீடியோ பதிவுகளையும் ஜிப்மர் மருத்துவ குழுவுக்கு ஒப்படைக்கவும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாளை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் உடலைப் பெற்றுக் கொள்கிறோம். 11 மணிக்குள் அடக்கம் செய்கிறோம். இறுதி ஊர்வலத்தின் போது போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in