கூட்டுறவு சங்கத் தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிப்புக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தலைவர்களின் காசோலை அதிகாரத்தைப் பறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் 22.3.2022-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கையொப்பமிட்டு வழங்கும் காசோலைகளை பணப்பரிவர்த்தனைக்காக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளை மேலாளர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்/ இணைப் பதிவாளர் 6.4.2022-ல் சுற்றறிக்கை அனுப்பினார்.

இந்த சுற்றறிக்கைகளை ரத்து செய்யக்கோரி முதுகுளத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்க் தலைவர் எஸ்.ஆர்.சங்கரபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா கார்த்திகேயன் வாதிடுகையில், "கூட்டுறவு சங்கத் தலைவர்களின் பதவி காலத்தை 5 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்து தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த நிலையில் கூட்டுறவு சங்கத் தலைவர்களுக்கான காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது" என்று வாதிட்டார்.

இதையடுத்து, கூட்டுறவு சங்கத் தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிப்பு சுற்றறிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in