ரமலான் பெயரில் வசூலிக்கப்பட்ட பணம்: என்ஐஏ, அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ரமலான் பெயரில் வசூலிக்கப்பட்ட பணம்: என்ஐஏ, அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில அரசு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நலப்பணிகளை மேற்கொள்வதாக கூறி சென்னையில் பணம் வசூலிக்கப்பட்டது. ரமலான் முடிந்த நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டு அது சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு செய்த எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நாகூர் மீரான் மற்றும் மண்ணடி அப்துல்லா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி, ஆவடி காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இதனால் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அவரது மனுவில் தெரிவித்துள்ளார். இதனைத் தடுக்கக்கோரி அளிக்கப்பட்ட மனு மீது தமிழக டிஜிபி, ஆவடி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டுமென அவரது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மனுதாரருக்கும், எதிர் மனுதாரர்களுக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சினையை நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "இது தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் சமூகத்தைச் சீரழிக்கும் நிலை தொடர்பான தீவிரமான விஷயம் என்பதால் அரசு கவனம் செலுத்த வேண்டும், மனுதாரர் கூறுவதுபோல நடந்தால் அது தடுக்கப்பட வேண்டும்" எனவும் அறிவுறுத்தினர். பின்னர் வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை, மாநில அரசு ஆகியவை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in