
தமிழகத்தில் ’இன்ப்ளூயன்சா-ஏ’ வைரஸ் காரணமாக காய்ச்சல், உடல்வலி, தொண்டை வலி உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பன்றி காய்ச்சல், கொரோனா என அடுத்தடுத்து நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 'இன்ப்ளூயன்சா-ஏ’ வைரஸால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி உள்ளிட்டவைகள் இதன் அறிகுறியாக இருக்கின்றனர். பருவ காலங்களில் ஏற்படும் நோய்களில் இதுவும் ஒருவகை என மருத்துவர்கள் கூறினாலும், அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ப்ளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக மாவட்டத் துணை சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி ’’பரவி வரும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும், காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.
இதை தவிர குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவு பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக அரசு சார்பில் வரும் 10-ம் தேதி ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்றும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.