இன்னலில் இஸ்ரோவுக்கு நிலம் தந்தவர்களின் வாழ்க்கை; மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!

இன்னலில்  இஸ்ரோவுக்கு நிலம் தந்தவர்களின் வாழ்க்கை; மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!

சந்திரயான் -3, ஆதித்யா எல்-1 என அடுத்தடுத்து விண்கலன்களை விண்ணுக்கு அனுப்பி உலகின் வெற்றிகரமான விண்வெளி மையமாக மாறி நிற்கிறது இஸ்ரோ. விண்வெளி ஆய்வில் தொடர் வெற்றிகளை பதிவு செய்துவரும் இஸ்ரோவின் வெற்றியை பார்த்து நாம் பெருமிதம் கொள்ளும் அதேசமயம் அந்த இஸ்ரோவுக்காக ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை தாரைவார்த்துக் கொடுத்த மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மொத்தமாக தொலைத்துவிட்டு நிற்கின்றனர்.

சொந்த ஊருக்குப் போகவே பாதுகாப்பு காவலர்களின் அனுமதி தேவை. திருமணம், இறப்பு  போன்ற சடங்குகளுக்கு சொந்தபந்தங்கள் வரக்கூட அனுமதி தேவை. நாட்டின் பாதுகாப்பு, சரணாலய பாதுகாப்பு என்றெல்லாம் காரணம் சொல்லி இத்தனை கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல், தங்கள் நிலங்களை இஸ்ரோவுக்கு தாரைவார்த்த மக்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யுமளவுக்குப் பொறுமையிழந்து போயிருக்கிறார்கள்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஒரு தனித்தீவில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்துதான் ஏவுகணைகள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. ஆந்திர - தமிழக கடல் எல்லையில் சென்னைக்கு வடக்கே சுமார் 43 கி.மீ தூரத்தில் இந்த இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கைக்கோள் செலுத்தும் நிலையம் அமைக்க கடந்த 1969-ம் ஆண்டு இடம் தேர்வுசெய்யப்பட்டது. கிழக்கு நோக்கிய ஏவுதிசை, பூமியின் சுழற்சி, மத்திய நேர்க்கோட்டிற்கு நெருக்கமான இடம் மற்றும் அதிகமான மக்கள் வசிக்காத பாதுகாப்பான பகுதி என பல்வேறு அம்சங்களை முன்வைத்து இந்த இடம் தேர்வுசெய்யப்பட்டது.

இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான சதீஷ் தவானின் நினைவாக இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது. இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் கடற்கரையில் 27 கி.மீ நீளத்துக்கு அமைந்திருக்கிறது. மொத்தம் 145 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஒரு தீவு இது.  இஸ்ரோ இங்கு வருவதற்கு முன்பாக இப்பகுதி சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் வனமாக இருந்ததாகவும் சில பகுதிகளில் விவசாய நிலங்கள் இருந்ததாகவும் அங்கு வசித்த மக்கள் சொல்கிறார்கள்.

பூடி ராயதுருவு கிராமத்துக்கு படகுப் பயணம்...
பூடி ராயதுருவு கிராமத்துக்கு படகுப் பயணம்...

ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ விண்வெளி மையம் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதி என்பதால் முறையான அனுமதி இல்லாமல் யாரும் இந்தப் பகுதிக்குள் பிரவேசிக்க முடியாது. அந்தளவுக்கு சுமார் 14 ஆயிரம் துணை ராணுவ படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்தப் பகுதியை தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள்.

விண்வெளி ஆய்வு மையம் அமைவதற்கு முன் இங்கு வசித்து வந்த மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் செய்து பிழைத்தவர்கள். இந்தப் பகுதி விண்வெளி ஆய்வு மையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பிறகு, இங்கு வசித்த மக்களுக்கு கூடூரு தொகுதியில் உள்ள வாகாடு, சிட்டமூர் ஆகிய இரு மண்டலங்கள், சூலூர்பேட்டை தொகுதியில் உள்ள சூலூர்பேட்டை மற்றும் துரைவாரி சத்திரம் ஆகிய இரு மண்டலங்கள் என மொத்தம் 9 பஞ்சாயத்துகளில் வசிப்பிடம் ஒதுக்கப்பட்டது. அங்கு வீடுகட்டிக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ள அந்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் அப்போது வழங்கப்பட்டது. அன்றைக்கு இஸ்ரோவுக்காக தங்களது சொந்த ஊரைக் காலிசெய்துவிட்டு வெளியேறிய மக்கள் சுமார் 37,500 பேர் இப்போது இந்த 9 பஞ்சாயத்துகளில் வசிக்கிறார்கள். 

இஸ்ரோவுக்கு மிக அருகில் 1996-ல் அறிவிக்கப்பட்ட புலிகாட் சரணாலயமும் உள்ளது. இங்கிருந்த பறவைகளின் சரணாலயமும் 1996-ல் வன விலங்குகள் சரணாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் இதையொட்டியும் இந்தப் பகுதியில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தார் சாலை அமைக்கக்கூடாது, ஆழ்துளை கிணறுகள் அமைக்கக்கூடாது, அதிக ஒலி எழுப்பும் மோட்டார்களை உபயோகப்படுத்தக்கூடாது, லாரிகள் உள்ளிட்ட ஏவ்வித கனரக வாகனங்களும் ஊருக்குள் வரக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்து வைத்திருக்கிறது. இதனால், இஸ்ரோவை ஒட்டி வசிக்கும் மக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளைக்கூட அமைத்துக்கொள்ள முடியாமல் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். பிழைப்புக்கும் சரியான வழி இல்லாததால், ஒரு காலத்தில் பல ஏக்கர்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்த மக்கள் இப்போது விவசாய கூலிகளாக பிழைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பூடி ராயதுருவு கிராமத்தின் நுழைவு வாயிலில் கேட் அமைத்து பாதுகாப்புப் பணியில் இருக்கும் துணை ராணுவ படையினர்
பூடி ராயதுருவு கிராமத்தின் நுழைவு வாயிலில் கேட் அமைத்து பாதுகாப்புப் பணியில் இருக்கும் துணை ராணுவ படையினர்

இஸ்ரோவுக்காக அப்போது சுமார் 37 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அங்கிருந்த மக்கள் அனைவரும் தற்போது இஸ்ரோவை ஒட்டியே தங்களின் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். ஆனால், தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு இவர்களால் சுதந்திரமாக சென்றுவருவதே இயலாத காரியம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை கொடுத்திருக்கிறது இஸ்ரோ. அடையாள அட்டை இல்லாமல் இவர்கள் யாரும் வெளியே வரமுடியாது. அப்படி வந்தால் மீண்டும் இவர்களால் அத்தனை எளிதாக ஊருக்குள் போகமுடியாது.

இஸ்ரோவை சுற்றிலும் பெரிய மதில் சுவர் எழுப்பி, அதன் மேல் இரும்பு முள் கம்பிகளால் வேலி அமைத்து, 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய துணை ராணுவ படையினர் காவல்காத்து வருகின்றனர். வெறும் 20 அடி சாலை மட்டுமே பூடி ராய துருவு, நவாப் பேட்டை கிராமங்களுக்கு போடப்பட்டுள்ளது. இவ்வழியே காலையில் இரண்டு மாலையில் இரண்டு என அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதிலும் அடையாள அட்டை இருப்பவர்களைத் தவிர வேறு யாரும் பயணிக்க முடியாது. பேருந்தை விட்டு இறங்கினாலும் உடனடியாக வசிப்பிடத்துக்குச் செல்லமுடியாது. கொஞ்ச தூரம் படகில் பயணித்துத்தான் அக்கரையில் உள்ள அவர்களின் வாழ்விடத்துக்குச் செல்லமுடியும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பூடி ராயதுருவு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் மதுசூதன் ரெட்டி, “வன விலங்குகளின் சரணாலய சட்டம் ஒருபுறம், இஸ்ரோவுக்காக பலத்த பாதுகாப்பு ஒருபுறம் என நாங்கள் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறோம். இஸ்ரோவுக்கு நிலம் வழங்கினால், பிற்காலத்தில் நாட்டுக்குப் பெருமை என நினைத்து எங்கள் நிலங்களை வழங்கினோம். நாங்கள் நினைத்தபடியே இஸ்ரோவை வைத்து நாடு பெருமைகொள்கிறது. ஆனால், நாங்கள் தான் நட்டாற்றில் நிற்கிறோம்.

நாங்கள் வசிக்கும் கிராமங்கள் அனைத்தும் மத்திய ரிசர்வ் படை மற்றும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், எங்கள் ஊர்களுக்கு மும்முனை மின்சாரம்கூட தரமறுக் கிறார்கள். விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லை.  செல்போன் நெட்வொர்க் கூட வேலை செய்யாது. தனியாருக்குச் சொந்தமான சொத்துகள் கூட மத்தியப் படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

மதுசூதன் ரெட்டி
மதுசூதன் ரெட்டி

எங்கள் கிராமங்களில் யாருக்காவது திருமணம் நடந்தாலோ அல்லது யாராவது இறந்துவிட்டாலோ அந்த நிகழ்வுகளில் வெளியூரில் வசிக்கும் எங்களது உறவினர்கள் அத்தனை சுலபமாக கலந்துகொள்ள முடியாது. திருமணமாக இருந்தால் முன்கூட்டியே யார் யார் வருகிறார்கள் என அவர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட விவரங்களை இஸ்ரோ மக்கள் தொடர்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும். இஸ்ரோவால் அனுமதிக்கப்படும் நபர்கள் மட்டுமே திருமணத்துக்கு வரமுடியும். அனுமதித்த நபர்களைவிட ஒருவர் கூடுதலாக வந்தாலும் ஊருக்குள் விடமாட்டார்கள். இதனால் எங்கள் பகுதியில் பெண் கொடுக்கவோ பெண் எடுக்கவோ தயங்குகிறார்கள். இதனால் பலபேரது திருமணம் தடைபட்டு நிக்கிது.

அப்படித்தான் துக்க நிகழ்வுக்கும். இறுதிச் சடங்கிற்கு வருபவர்கள் பற்றிய விவரங்களை இஸ்ரோவுக்கு நாம் எழுதிக்கொடுத்து அனுமதி வாங்க வேண்டும். அனுமதி பெற்று வந்தாலும் ஊருக்கும் வந்த அன்றே அவர்கள் திரும்பிவிட வேண்டும். இதையெல்லாம் பார்க்கையில், நாம் இந்தியாவில் தான் வசிக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் வசிக்கிறோமா என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது” என்று வேதனைப்பட்டார் அவர்.

அதே ஊரைச் சேர்ந்த வெங்கடரத்தினம் என்பவர், “எங்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். நாங்கள் மீன்பிடிப்பதாக இருந்தால்கூட தமிழக எல்லைக்குள் தான் போய் மீன்பிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால், அங்கேயும் எங்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் விசைப்படகுகள் வாங்கித் தந்து எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிசொல்ல வேண்டும்” என்றார்.

கோவர்தன் குமார்
கோவர்தன் குமார்

பூடி ராயதுருவு கிராமத்தைச் சேர்ந்த கோவர்தன் குமார் என்பவர் திருமணமாகி தற்போது சென்னையில் வசிக்கிறார். தங்கள் பகுதியின் அவல நிலை குறித்து இவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். ’விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும், சூலூர்பேட்டைக்கு சாலை வசதி வேண்டும், மும்முனை முன்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பவை கோவர்தன் குமார் மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்டிருக்கும் பரிகாரங்கள்.

சந்திரயான், ஆதித்யா எல் -1 என அடுத்தடுத்து விண்கலன்களை வெற்றிகரமாக ஏவி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது இஸ்ரோ. இதனால் இஸ்ரோவை நாடே கொண்டாடி வருகிறது. ஆனால், இஸ்ரோவின் இந்த வெற்றிகளுக்கு ஆதியில் அடித்தளம் தந்து உதவிய மக்களின் நிலைமை இப்போது பரிதாபத்தில் உள்ளது.

சந்திரனுக்கே சர்வசாதாரணமாய் விண்கலம் விட்டுக்கொண்டி ருக்கும் இந்தக் காலத்திலும் செல்போன் சேவைகூட கிடைக்காமல் சிரமப்படும் இந்த மக்களின் வேதனையைக் கண்டுகொள்வது யார்? ஆடம்பர வசதிகளைச் செய்துதரா விட்டாலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைத் தந்து எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள் என்று கேட்கும் அந்த மக்களின் கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது புரிந்துகொள்ளட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in